பட்டா வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை: 14 ஆண்டுகளுக்கு பின் தண்டனை


திருப்பூர்: பட்டா வழங்க ரூ.8000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பிஎன் ரோட்டை சேர்ந்தவர் ஹோமியோபதி டாக்டர் தண்டபாணி. இவரது அண்ணன் மேகநாதன். இவர்களது தந்தை மாரப்பன், மகன்கள் இருவருக்கும் ராக்கியாபாளையத்தில் உள்ள, மூன்று ஏக்கர் நிலத்தில், தலா 93 சென்ட் பிரித்து கொடுத்தார்.

இதையடுத்து, தனித்தனி பட்டா கேட்டு சகோதரர்கள் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். அப்போது மண்டல துணை தாசில்தாராக இருந்த பாலசுப்ரமணியம் (56), பட்டா வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். பேரம் பேசியதில் ரூ.8 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தண்டபாணி கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.

அவர்களின் அறிவுறுத்தல் படி கடந்த 2008 ஜூலை 10ம் தேதி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தண்டபாணி, பாலசுப்ரமணியத்திடம் ரூ.8 ஆயிரத்தை கொடுத்தபோது போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது. நீதிபதி செல்லத்துரை நேற்று அளித்த தீர்ப்பில் பாலசுப்ரமணியத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Related posts

தேனியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!