திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்: இன்றிரவு விஸ்வசேனாதிபதி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று விஸ்வசேனாதிபதி வீதியுலா, அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று அங்குரார்ப்பணம் எனப்படும் முளைப்பாரி நிகழ்ச்சி நடக்கிறது. இன்றிரவு 7 மணிக்கு ஏழுமலையானின் சேனாபதியான விஸ்வசேனாதிபதி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வருகிறார். முதல் நாளான நாளை மாலை 3 மணியளவில் கருட உருவம் பொறித்த பிரம்மோற்சவ கொடி விஸ்வசேனாதிபதி, சக்கரத்தாழ்வார், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோருடன் மாடவீதியில் வீதியுலா பவனி வரும். பின்னர் கோயில் தங்க கொடிமரத்தில் மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும். தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார்.

இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.2ம் நாள் (5ம் ேததி) காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், 3ம்நாள் (6ம் தேதி) காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 4ம்நாள் (7ம் தேதி) காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வபூபால வாகனத்திலும் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் பவனி நடைபெறும். 5ம் நாள் (8ம் தேதி) காலை மோகினி அலங்காரத்தில் சுவாமியும், அவரை பின்தொடர்ந்து தனி பல்லக்கில் கிருஷ்ணரும் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். அன்றிரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருடசேவை உற்சவம் நடைபெறும். 6ம் நாள் (9ம்தேதி) காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு யானை வாகனத்திலும் பவனி நடைபெறும். 7ம் நாள் (10ம் தேதி) காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 8ம்நாள் (11ம் தேதி) காலை மகா ரதம் எனப்படும் தேரோட்டமும் நடைபெறும்.

அன்றிரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெறும். 9ம் நாள் (12ம் தேதி) காலை புஷ்கரணியில் (குளம்) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், பின்னர் கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், நறுமணம் மிகுந்த மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரம்மோற்சவத்ைத முன்னிட்டு திருப்பதி-திருமலை இடையே சிறப்பு பஸ் வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!