அன்றாட உணவுக்கே வழியின்றி தவிப்பதால் காதலனை தேடி இந்தியாவுக்கு வந்த பாக். பெண்ணுக்கு சினிமாவில் வாய்ப்பு: திரைப்பட தயாரிப்பாளர் அறிவிப்பு

லக்னோ: பாகிஸ்தானில் இருந்து காதலனை தேடி இந்தியாவுக்கு வந்த பெண் தற்போது அன்றாட உணவுக்கே வழியின்றி தவிப்பதால், அவரை வைத்து சினிமா எடுக்க திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் முன்வந்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்பவர் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவினார். இவரது ‘பப்ஜி’ கேம் காதலன் சச்சினை சந்திப்பதற்காக வந்த அவர், தற்போது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கிறார். தனது காதலன் சச்சினை மறுதிருமணம் செய்து கொண்டதாக சீமா ஹைதர் அறிவித்தார்.

தனக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். அதேநேரம் அவர் பாகிஸ்தான் உளவாளியா? என்ற கோணத்தில் அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து விசாரித்து வருகின்றனர். சில நாட்கள் பரபரப்பு செய்தியாக பேசப்பட்ட இந்த காதல் ஜோடியின் பொருளாதார நிலை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. காதல் ஜோடிகள் இருவரும் எங்கும் வேலைக்குச் செல்லாததால் அன்றாட உணவுக்கே தவிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்களும் வைரலானது.

தற்போது உத்தரபிரதேச மாநில நவநிர்மான் சேனா தலைவர் அமித் ஜானி, வறுமையில் வாடும் காதல் ஜோடிக்கு உதவ முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் திரைப்படத்தில் சீமா ஹைதர் – சச்சினை நடிக்க வாய்ப்பு வழங்குவேன். உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் சாஹு கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘ஒரு தையல்காரன் கொலைக் கதை’ என்று பெயரில் திரைப்படம் எடுத்துள்ளேன். அந்தப் படம் நவம்பரில் வெளியாகிறது. சீமா ஹைதர் இந்தியாவுக்குள் ஊடுருவியதை நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம் வீட்டில் சாப்பாடிற்கே வழியில்லாமல் இருக்கும் நிலைமையை பார்த்து உதவ முன்வந்துள்ளேன். சீமா ஹைதரை சினிமாவில் நடிக்க வைப்பதற்கான அனுமதியை பெற, எனது உதவியாளர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு