பென்னாலூர் பேட்டை அருகே சோகம் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பரிதாப பலி

ஊத்துக்கோட்டை: பென்னாலூர் பேட்டை அருகே பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர் பேட்டை அடுத்த வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில், தனியாருக்குச் சொந்தமான ரைஸ்மில் கட்டப்பட்டு வருகிறது. இதில் குப்பையா-வனிதா தம்பதி அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு துரைவேல் (7) என்ற மகனும், சினேகா (எ) செஞ்சம்மா (6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று குப்பையா வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர், மனைவியிடம் குழந்தைகள் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு வனிதா, பசங்க விளையாடச் சென்றிருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் வரவில்லையே என்று பயந்த இருவரும் அவர்களை தேடிச்சென்றனர். பின்னர் வீட்டின் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரைஸ்மில் கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர். அதில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழைநீரில் விளையாடச் சென்றபோது துரைவேல் மற்றும் செஞ்சம்மா ஆகிய இருவரும் பள்ளத்துக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்துள்ளனர். இருவரும் மிதப்பதைக் கண்டு குப்பையா-வனிதா தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். உடனே குப்பையா, இருவரையும் தூக்கிக்கொண்டு கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைக் கேட்டு குப்பையா-வனிதா தம்பதி கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாலூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்