சாக்லெட் வாங்கி கொடுத்து பைக்கில் பெண் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை அடித்து உதைத்த மக்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே பெண் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரி தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். திருக்கழுக்குன்றம் அருகே அடவிளாகம் கிராமத்தில் இன்று காலை 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பைக்கில் வந்த ஒரு வாலிபர், அந்த பெண் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி கொஞ்சியிருக்கிறார். இதன்பின்னர் அந்த குழந்தையை பைக்கில் உட்காரவைத்துக்கொண்டு கிளம்ப முயற்சித்துள்ளார்.

திடீரென அந்த குழந்தை கதறி அழ ஆரம்பித்ததால் அப்பகுதி மக்கள் வந்து பார்த்தனர். அப்போது பைக்கில் குழந்தையை கடத்த முயன்ற நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்தனர். இதனால் குழந்தையை விட்டுவிட்டு வாலிபர் பைக்கில் தப்பி செல்ல முயன்றார். ஆனால் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பைக்கில் சுமார் 5 கிமீ தூரம் விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து அடவிளாகம் கிராமத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் அங்கு ஓரிடத்தில் வைத்து அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் வந்து பொதுமக்கள் பிடியில் இருந்து வாலிபரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில் அவர் திருப்போரூர் அருகே புங்கேரி கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (26) என தெரியவந்தது. இதுசம்பந்தமாக திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர். பெண் குழந்தையை எதற்காக கடத்த முயன்றார் குழந்தை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவரா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு

ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!