பொட்டிக் பிசினஸிலும் மாஸ் காட்டலாம்!

ஆள்பாதி ஆடை மீதி என்பது ஃபேஷன் விளம்பர உலகத்திற்கென சொல்லப்பட்ட பொன்மொழியாக பொருந்திப் போகும். தங்களை அழகாக காட்டிக்கொள்ள யார்தான் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் தனித்துவமான உடைகள் வடிவமைப்புகளுடன் பலரையும் கவர்ந்துவருகிறார் சிந்து. தனது பிரத்தியேகமான உடை வடிவமைப்பில் பட்டையை கிளப்பியபடி, ஃபேஷன் துறையில் இறக்கை கட்டிக்கொண்டு பம்பரமாய் சுழன்று வருகிறார் காஸ்ட்யூம் டிசைனர் சிந்து. தற்போது முன்னணியில் உள்ள அனைத்து தொலைக்காட்சியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஆடைகளை வடிவமைப்பதில் முன்னணியில் இருப்பவர் தான் சிந்து. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை, நடிகர்கள் பலரை அழகாக காண்பிப்பதில் இவரது உடைகளின் பங்கு மிக அதிகம். விஜே அர்ச்சனா, பவித்ரா லட்சுமி, மைனா நந்தினி, சினேகன், கனிகா என பல ப்ரபலங்களுக்கு இவர் தான் உடைகளை வடிவமைத்து தருகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களில் பலருக்குமே இவர் தான் ஆடை வடிவமைப்பாளர்தனது ஃபேஷன் டிசைனிங் துறை குறித்தும், விஐபிகளுடன் பயணிக்கும் அனுபவங்கள் குறித்தும் சிந்து பகிர்ந்துகொண்டதாவது…

ஃபேஷன் டிசைனிங் துறையை ஏன் தேர்வு செய்தீர்கள்?

எனக்கு சிறு வயதிலிருந்தே டெய்லரிங் குறித்த விஷயங்களில் ஆர்வம் உண்டு. 2017 ஆண்டில் பொட்டிக் டிசைனிங் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி துறையில் யூனிவர்சிட்டி டாப்பராக வந்திருந்தேன். எனது ஆரம்ப நிலையில் பொட்டிக் ஒன்றில் வேலை பார்த்தபடி பகுதி நேரமாக உடைகளை வடிவமைத்து வந்தேன். கோவிட் காலத்தில் அதற்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போதும் வீட்டிலிருந்தபடியே ஆடை வடிவமைப்பை தொடர்ந்து செய்து வந்தேன். பின்னர் மிகுந்த சிரமத்திற்கிடையே எனது நண்பர்களின் உதவியுடன் வெறும் ஒரு லட்சம் ரூபாயில் தையல் இயந்திரத்துடன் ஒரு எந்திரமாக மாறி இரவும் பகலும் உழைத்ததில் இன்று தனியாக ஸ்டுடியோ வைக்குமளவிற்கு ‘‘டிசைனி சிந்து” வாக உருமாற்றம் கண்டேன். தற்போது ‘‘டிசைன்டு பை சிந்து” என்கிற என்னுடைய டிசைன் ஸ்டுடியோ சென்னை அண்ணா நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

உங்கள் விஐபி கஸ்டமர்கள் குறித்து சொல்லுங்கள்?

இன்று பல சின்னத்திரை பிரபலங்கள், விளம்பரப் படங்கள் செய்பவர்கள், போட்டோ ஷூட் செய்பவர்கள் என பலரும் எனது வாடிக்கையாளர்கள் தான். பல வெள்ளித்திரைப் பிரபலங்களுக்கும் உடைகளை வடிவமைத்து தருகிறேன். யோகிபாபு, கிங்ஸ்லி போன்றவர்களுக்கும் உடைகளை வடிவமைத்து வருகிறேன். மைனா நந்தினி, பவித்ரா லட்சுமி, விஜே அர்ச்சனா, மதன் கௌரி, விக்ரமன், ரவீனா, திவ்யா துரைசாமி என பலருக்கும் உடை வடிவமைத்த அனுபவங்கள் உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்திருந்த விக்ரமனின் பிரத்தியேக டிரஸ் டிசைனர் நான் தான். மதன் கௌரி அவர்களின் போட்டோஷூட்டிற்கு உடைகள் வடிவமைப்பை செய்து தந்துள்ளேன்.

எந்தெந்த ஷோக்களில் உடை வடிவமைக்கும் வாய்ப்புகள் கிடைத்தது…

‘பல பிரபல தனியார் டிவி நிகழ்ச்சிகள் துவங்கி, சில நடன நிகழ்ச்சிகள், சின்னத்திரை சீரியல்கள் என வரிசையாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஒரு ஷாட் பிலிமில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது என்பது எனது தொழில் நேர்த்திக்கு கிடைத்த கௌரவங்கள் எனலாம்’ உற்சாகமாக பேசுகிறார் சிந்து.

டிவி நிகழ்ச்சிகளுக்கான உடை வடிவமைக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

முதலில் பவித்ரா லட்சுமிக்கு எதிர்பாராத விதமாக உடை வடிவமைப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உடையால் எனக்கு பலரிடமிருந்து பலவகையான பாராட்டுதல்கள் கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து டிவி பிரபலங்கள் என்னிடமே காஸ்ட்யூம் டிசைனிங்கிற்கு கொடுக்கத் துவங்கி இன்று டிவி பிரபலங்கள் பலருக்கும் காஸ்ட்யூம் டிசைனிங் செய்து தருகிறேன்.

உங்கள் உடைகளுக்கான வரவேற்பு வேறு எங்கெல்லாம் இருக்கிறது?

நான் டெலிவிசன் ஷோக்களை தவிர நிறைய கல்யாண ஆர்டர்கள், போட்டோ ஷூட், காம்போ ஆர்டர்கள், பையர் பிலிம்ஸ், ஷாட் பிலிம்ஸ், போர்ட் போலியோ என பலவற்றிற்கும் உடைகளை வடிவமைக்கும் பணிகளை செய்து வருகிறேன். நடனப் போட்டிகளுக்கான உடைகள், சன் டிவி சீரியல்களுக்கு உடைகள் என எனது ஷெட்யூல் பிஸியாக போய்க் கொண்டிருக்கிறது. இப்படி டிவி நிகழ்ச்சிகளுக்கு நான் டிசைன் செய்யும் உடைகளை பிரபலங்கள் உடுத்த வேண்டும் என்பதெல்லாம் என்னுடைய இதெல்லாம் சிறு வயது கனவு. அதில் தற்போது வாய்ப்புகள் கிடைத்தது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியான விஷயம். பல குறும்படங்களிலும் வேலை செய்து வருகிறேன்.

விஐபிகள் உடைகளை வடிவமைப்பது குறித்து சொல்லுங்கள்?

விஐபிகளை பொறுத்தவரை அவர்களின் விருப்பத்திற்கேற்ப டிரெண்டிங் உடைகளைப் பிடித்த நிறங்களில் நவீன டிசைன்களில் உருவாக்கித் தருவேன். ப்ரீவெட்டிங், வெட்டிங், பர்த்டே பார்ட்டி போன்ற போட்டோ ஷூட்களை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் சொல்லும் கலர்கள் மற்றும் தீம்களுக்கு ஏற்றவாறு உடைகளை உருவாக்கி , அதில் எங்களின் ஆகச் சிறந்த கற்பனைத் திறனை புகுத்தி புதுமையாய் தருவோம். நடனம் மற்றும் விழா மேடைகளுக்கான உடைகள் என்றால் அந்த குழுக்களுக்கான தீம்களுக்கு ஏற்றவாறு உடைகள் வடிவமைத்துத் தருவோம்.முன்பெல்லாம் திருமண வரவேற்புகளுக்கு மட்டுமே ‘கஸ்டமைஸ்ட்’ ஆடைகளை வடிவமைத்து பயன்
படுத்துவார்கள். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் பெண் பார்ப்பது முதல் நிச்சயம் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், சீமந்த போட்டோஷூட், குழந்தை பிறப்பு, குழந்தையின் பிறந்த நாள் வரை கொண்டாட்டங்கள் நீள்கிறது. அனைத்து விசேஷசங்களுக்குமே பிரத்தியேக ஆடைகளை வடிவமைத்து அணிவதில் எல்லா தரப்பினருமே ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

விருதுகள், பாராட்டுகள் குறித்து…

எனது உடை வடிவமைக்கும் பணிக்காக நிறைய பாராட்டுகளோடு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. 2017ம் ஆண்டில் பொட்டிக் டிசைனிங் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி துறையில் எனது பல்கலைக் கழகத்தில் கோல்ட் மெடல் வென்றிருந்தேன். அதன் பிறகு ‘‘பிசினஸ் எம்பிரஸ் விருது” 2022ல் கிடைத்தது. ‘‘இன்ஸ்பிரேஷன் உமன் ஆப்” தமிழ்நாடு விருது பெற்றுள்ளேன். இளம் சாதனையாளர் விருது. சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்காக ‘‘ஐகானிக் விருது” வழங்கப்பட்டது. ‘‘உமன் ஆப் வொண்டர்” விருது 2022ல் கிடைத்தது ஸ்டார் ஆப் தமிழ்நாடு 2023 மற்றும் 2024ல் கிடைத்தது. ‘‘ஸ்டார் ஐகானிக் விருது” 2023 மற்றும் 2024ல் கிடைத்தது. சினிமாக்காரன் விருது, லண்டன் யூனிவர்சிட்டி விருது சிறந்த உடை வடிவமைத்தற்கு கிடைத்தது. தமிழகத்தின் ஸ்டார் ஐகானிக் விருது சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்காக கிடைத்தது. 2024ம் ஆண்டில் பொன்மகள் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

உங்கள் எதிர்கால புராஜெக்ட்கள் குறித்து சொல்லுங்கள்…

எனக்கான பல வாய்ப்புகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. ஒரு பிரபல இசையமைப்பாளருக்கு உடை வடிவமைக்கும் வாய்ப்புகள் பேச்சுவார்த்தைகளில் உள்ளது. இன்னும் முடிவாகவில்லை. இது தவிர வேறு சில பிரபலங்களும் உடை வடிவமைக்க என்னை அழைத்திருக்கிறார்கள். தற்போது ஃபேஷன் டிசைன்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகிறேன். நேரடியான வகுப்புகைளையும் எடுத்து வருகிறேன். இத்துறையில் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.பிடித்தமான உடைகளை வடிவமைப்பது ஆடை வடிவமைப்பாளருக்கு பெரும் சவாலான பணி என்பதுதான் உண்மை.

அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த பொட்டிக் பிசினஸில் தனித்துவமாக ஜெயிக்கும் ரகசியம் என்ன?

ஆடை வடிவமைப்பில், படைப்பாற்றல் மிகவும் அவசியம். ஆடை வடிவமைப்பாளர் என்பவர் டிரெண்டிங்கிற்கு ஏற்ப படைப்பாற்றல் மற்றும் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஃபேஷன் துறையைப் பொறுத்த மட்டில் கிரியேட்டிவிட்டியை, மேம்படுத்திக்கொண்டே இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. மேலும் மற்ற டிசைனர்களிடம் இல்லாத ஏதோ ஒன்றை தீர்மானித்து அதை நோக்கி பயணிப்பதும் அவசியம். குறிப்பாக சில பகுதிகளில் நல்ல பிளவுஸ் தைப்பதற்கு டிசைனர்களே இருக்க மாட்டார்கள், ஒரு சில இடங்களில் பார்ட்டி வேர்கள், சில இடங்களில் ஜவுளி ஆர்டர்களே கூட எடுக்க ஆளில்லாத சூழல் நிலவும். இந்தக் களஆய்வுகளும் அவசியம். அதை நோக்கி எது தேவையோ அதற்கான காலியிடத்தை நிரப்பினாலும் பிசினஸ் வெற்றி பெறும்.

உங்களைப் போன்ற பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்கள் அனைவருக்குமே கல்வி அவசியம். கல்வி உங்கள் வாழ்க்கையைப் பெருமளவு மாற்றும், கூடவே ஒரு தொழிலை கற்றுக்கொண்டால் அது உங்களுக்கு வேறு ஒரு புதிய உலகினை காண்பிக்கும். ஏதேனும் ஒரு வேலையையோ, தொழிலையோ கெட்டியாகப் பிடித்து கொள்ளுங்கள். அது உங்களை இக்கட்டான சூழலிலிருந்து கட்டாயம் வெளியே கொண்டு வர பெரிதும் உதவும். ஃபேஷன் துறையில் சாதிக்க மிகுந்த கற்பனைத் திறனும், டிரண்டுக்கு ஏற்ற அப்டேட் செய்து கொள்ளும் திறனும் இருந்தால் சிறப்பு. எந்த துறையிலும் ஆர்வத்துடன் துணிந்து இறங்குங்கள் வெற்றி உங்கள் வசமாகும்’ என்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் சிந்து.

– தனுஜா ஜெயராமன்

 

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி