அருளும் பொருளும் வாரி வழங்கும் ஆடி மாத திருவிழாக்கள்

சக்தி மாதம்

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று சொல்வார்கள். மந்திரங்கள் உச்சரிப்பதற்கும், ஜபம் செய்வதற்கும், ஆடி மாதம் ஏற்றது என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. ஆடி என்பதற்கு கண்ணாடி என்று பொருள். ஆடி என்பதற்கு ஆடுதல் என்று ஒரு பொருள். ஆடி என்பதற்கு அதிர்தல் என்று பொருள். உதாரணமாக, வண்டி அந்த பாலத்தின் மீது சென்றபோது ஆடியது என்கிறோம் அல்லவா. ஆடி என்பதற்கு அசைதல் என்று ஒரு பொருள். இத்தனை பொருள்களும் இந்த ஆடி மாதத்திற்கு ஏதோ ஒரு வகையில் பொருந்தும். உதாரணமாக, ஆடி என்பதை ஆடுதல் என்று எடுத்துக் கொண்டால் ஆன்மிக உணர்வோடு ஆட வேண்டும். இறைவனை தொழுது கொண்டாடி ஆட வேண்டும். அப்படி நினைவூட்டத்தான் ஆடி அம்மன் கோயில்களில் கரகம் எடுத்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். ஆட வைக்கும்
திருவிழா மாதம் ஆடி.

ஆடி மாத திருவிழாக்கள் ஏன்?

நம்முடைய வாழ்க்கை இன்ப துன்பங்கள் என்ற அசைவுகளிலே இருக்கின்றது. ஆடுதல் என்றால் நிலையற்ற அசைவுகள். மேலே இன்பம் (மேடு) என்று வந்தால் அடுத்த நிமிஷம் கீழே (பள்ளம்) என்று வந்து விடுகிறது. இந்த நிலையற்ற உலக வாழ்க்கையிலே, நிலைவுள்ள ஒரு பொருளைத் தேடிக் கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய வாழ்நாளை பயன்படுத்த வேண்டும். ஆடுகின்ற இந்த உயிர் ஓட்டமானது நின்று விடுவதற்கு முன், இந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும். அதாவது நிலையற்ற வாழ்க்கையில் இருந்து நிலைக்கும் ஒரு வாழ்க்கையை நாம் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய வாழ்வின் நோக்கம். அதைத்தான் ஆன்மிகம் சொல்லுகின்றது. அதற்காகத்தான் இந்த ஆடி மாத திருவிழாக்கள்.

ஆடியும், உயிர் நாடியும்

ஆடி பிறந்து விட்டாலே அம்மன் கோயில்களில் பத்துநாள்
உற்சவத்தில் இருந்து (பிரமோற்சவம்), ஒரு நாள் உற்சவம் வரை, விதம் விதமாக கோயில் உற்சவங்கள் நடைபெறுவதை நாம் காணலாம். ஆடி மாதம் என்பது காற்றுக்குரிய மாதம். ஆடியில் காற்று அடித்தால் ஐப்பசியில் மழை வரும். விவசாயத்துக்கு உரிய மாதம். உயிர்களின் உயிர் நாடி நீர். “நீர் இன்றி அமையாது உலகு”. கடக ராசி என்பது நான்காவது ராசி. அதாவது நீர் ராசி. ஆடியில் (நீர் ராசி மாதத்தில்) எல்லாவிதமான நீர் நிலைகளிலும் புதிய நீர் வரத்து இருக்கும். நீரைக் கண்டால் விவசாயி களுக்கு உற்சாகம். “ஆடிப்பட்டம் தேடி விதை’’ என்பது போல ஆடி மாதம் உயிர் நாடியான மாதம் என்று சொல்வார்கள்.

ஆடி அமாவாசை மிக முக்கியம்

தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் அமாவாசையன்று முன்னோர்க்கு நீர் கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும். ஆடி அமாவாசை தினம் பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக கடைப் பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இரண்டு அமாவாசைகள் வருவதால் (ஆடி 1ஆம் தேதி அதாவது ஜூலை 17, ஆடி 31 – ஆகஸ்ட் 16ஆம் தேதி) முதல் அமாவாசையை சாதாரணமாக செய்துவிட்டு இரண்டாவது அமாவாசையை ஆடி ஆமாவாசையாக சிறப்பாகச் செய்ய வேண்டும். தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை (பிதுர் காலம்) மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிவந்து, மறைந்த முன்னோர்களுக்கு அவரவர் வழக்கப்படி படையல் இட்டு வழிபடலாம். அன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்கவேண்டும்.

ஆடி வெள்ளி

எத்தனை வெள்ளிக் கிழமைகள் வந்தாலும், ஆடி வெள்ளிக்கும், தை மாத வெள்ளிக்கும் என்று ஒரு தனிப் பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், இன்பங்கள் இல்லம் தேடி வரும். வாரக் கிழமைகளில், சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக் கிழமையாகும். சகல செல்வங்களும் கிடைக்க வெள்ளிக் கிழமை விரதம் உதவும். திருமகள் அருளைப் பெற்றுத் தரும். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால், நற்பலன்கள் வந்து சேரும். கிராமங்களில் ஆடி வெள்ளியன்று வேப்ப இலையை கொண்டு வந்து வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பார்கள். அத்துடன் ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், குங்குமம், இரண்டும் போட்டு, இந்த தீர்த்தத்தில் குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்வார்கள்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் கொண்டாட்டங்கள்

ஆடி என்றாலே ஆண்டாள் நினைவு வராமல் போகாது. 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதாரத்தலமாக அமைந்த சிறப்பு வில்லிபுத்தூருக்கு மட்டுமே உண்டு. அதுவும் இரண்டு ஆழ்வார்களும் தந்தையும் மகளுமாக இருப்பது அதைவிட சிறப்பு. மூன்றாவது சிறப்பு மகளாக அவதரித்தவர் சாதாரண மானிடப் பெண் அல்ல; பூமாதேவியே என்பது சிறப்பு. அந்தப் பெண்ணை பெருமாளே திருமணம் செய்து கொண்டார் என்பது அதைவிடச் சிறப்பு. ஒவ்வொரு வருடமும் ஆண்டாளின் அவதார உற்சவம் வில்லிபுத்தூரில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும்.

மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் விளை நிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து மீனாட்சி அம்மனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக் கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

Related posts

தனுசு ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன்

சீர்காழி தாடாளன்

சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?