தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகளுக்காக சிறிய புல் மைதானங்கள் மூடல்

ஊட்டி : இரண்டாவது சீசன் துவங்கிய நிலையில் தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன.
நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.குறிப்பாக, முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் முதல் சீசன் ஆக கடைபிடிக்கும் நிலையில் இச்சமயங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இது தவிர வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே சமயம் இரண்டாவது சீசன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது.

இச்சமயங்களில் தமிழகத்தின் சுற்றுலா பயணிகளை காட்டிலும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அதிகளவு வருவார்கள். குறிப்பாக, வட மாநில தேனிலவு தம்பதிகள் அதிகளவு வருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இரண்டாம் சீசனின் போது முதல் சீசன் போன்று மலர் கண்காட்சி,ரோஜா கண்காட்சி போன்ற விழாக்கள் ஏதும் நடத்தவில்லை என்ற போதிலும் தாவரவியல் பூங்காவில் வழக்கம் போல் பூங்கா முழுவதிலும் ஐந்து லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 12000 தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அந்த செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. இவைகள் ஓரிரு நாட்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் அடுக்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் மகிழ்ந்து விளையாடி செல்ல ஏற்றவாறு பூங்காவில் உள்ள புல் மைதானங்களை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானம் மற்றும் பெர்ன் புல் மைதானங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
நாள்தோறும் இந்த புல் மைதானங்களில் தண்ணீர் பாய்ச்சி சமன் செய்து சீரமைக்கும் பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்த இரண்டு புல் மைதானங்களுக்குள்ளும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு