கோரிக்கைகளை வலியுறுத்தி தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் 2ம் நாளாக கஞ்சி காய்ச்சி போராட்டம்

ஊட்டி : காலமுறை ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நேற்று இரண்டாவது நாளாக கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் 800க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 300 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 500 பேர் தற்காலிக பணியாளர்களாவே உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த போதிலும், இவர்கள் இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை.

மேலும், நிரந்தர பணியாளர்களுக்கும் இதுவரையில் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு போன்றவைகள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியார்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் கடந்த மாதம் 23ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அரசு இதுவரையில் எவ்வித பதிலும் அளிக்காத நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 13வது நாளாக உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இரண்டாவது நாளாக நேற்று கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பூங்கா பராமரிப்பு பணிகள் பாதித்துள்ளன. போராட்டம் தொடர்ந்தால், மலர் கண்காட்சி, ரோஜா காட்சி ஆகியவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related posts

தேசிய சராசரியை விட அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு: நிதி ஆயோக் அறிக்கையில் தகவல், 13 இலக்குகளில் தமிழ்நாடு முன்னிலை, காலநிலை மாற்ற கட்டுப்பாட்டுகளில் 81 மதிப்பெண்

வங்காளதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

இணைந்த கைகளாக இருக்கிறோம் திமுக-காங்கிரசை யாரும் பிரிக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி