பண்ருட்டியில் பரபரப்பு லோன் தவணை கட்டாத தொழிலாளியை தாக்கி தரத்தரவென இழுத்து சென்ற ஊழியர்-சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பர்சனல் லோன் கட்டாத ஆசாரியை தாக்கி தரத்தரவென ஊழியர் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (46). தச்சு தொழிலாளி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பைக் ஷோரூமில் முன் பணம் செலுத்தி இருசக்கர வாகனம் எடுத்து உள்ளார். மீதி பணத்தை மாதம் தவணையில் கட்டி உள்ளார்.

இவர் மாதம் தவணை தொகை சரியாக கட்டி முடித்ததால் தனியார் கிரிடிட் கம்பெனி மூலம் இவருக்கு பர்சனல் லோனாக ரூ.50,000 கடன் வழங்கப்பட்டது. இதற்காக மாத தவணையாக ரூ.1,950 கட்டி வந்த நிலையில், இந்த மாத தவணை சரியாக கட்டவில்லை என தெரிகிறது.இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜன் பண்ருட்டியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்வதற்கு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆண்டிக்குப்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தனியார் கிரிடிட் வசூல் ஊழியர் விக்கி என்பவர் நடராஜனிடம் இந்த மாதத்துக்கான தவணை தொகை கேட்டுள்ளார். அப்போது நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருக்கும்போது கலெக்ஷன் கேட்கலாமா என்று கூறியுள்ளார். இதனால் நடராஜனுக்கும், விக்கிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதில் நடராஜனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி தரதரவென இழுத்து சென்றார்.

இதில் நடராஜன் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நடராஜன் பண்ருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்ேபாது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு