மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின் கழிப்பறைக்குள் பதுங்கிய டிஎஸ்பி சஸ்பெண்ட்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பிரபல ரவுடியின் வீட்டுக்கு மது விருந்துக்கு சென்ற டிஎஸ்பி, சோதனைக்கு வந்த போலீசை பார்த்து பயந்து கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டார். இந்த சம்பவத்தில் டிஎஸ்பியும், அவருடன் விருந்தில் பங்கேற்ற 2 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் தம்மனம் பைசல். பிரபல ரவுடி. அவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தம்மனம் பைசல் மீது தான் கொச்சியில் முதன் முதலாக குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேலும் 1 வருடம் ஊருக்குள் நுழைய இவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கேரளாவில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்தது. இதையடுத்து ‘ஆபரேஷன் ஆக்’ என்ற பெயரில் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ரவுடி தம்மனம் பைசலை போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று அவரது வீட்டில் மது விருந்து நடப்பதாகவும், ரகசியமாக சிலர் பங்கேற்பதாகவும் அங்கமாலி போலீசுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தம்மனம் பைசலின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் ரவுடியின் வீட்டில் நடந்த மது விருந்தில் பங்கேற்க வந்தது, ஆலப்புழா குற்றப்பிரிவு டிஎஸ்பி சாபு தலைமையிலான போலீசார் என்பது தெரியவந்தது. சோதனைக்கு வந்த அங்கமாலி போலீசைக் கண்டதும் டிஎஸ்பி சாபு, பைசலின் வீட்டிலுள்ள கழிப்பறையில் ஒளிந்து கொண்டார்.

டிஎஸ்பி சாபு தலைமையில் 4 போலீசார் விருந்துக்கு வந்திருந்தது தெரியவந்தது. சோதனைக்கு வந்த அங்கமாலி போலீசார் ரவுடி தம்மனம் பைசல் உள்பட 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கமாலி போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விருந்தில் கலந்து கொண்ட 2 போலீசார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே டிஎஸ்பி சாபுவை தப்ப வைக்க போலீஸ் தரப்பில் முயற்சிக்கப்பட்டது. அங்கமாலி போலீசார் சோதனைக்கு சென்றபோது டிஎஸ்பி சாபு அங்கு இல்லை என்று எர்ணாகுளம் எஸ்பி வைபவ் சக்சேனா தெரிவித்தார். ஆனால் அவர் மது விருந்துக்கு சென்றது உண்மைதான் என்று தனிப்பிரிவு போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இது தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து டிஎஸ்பி சாபுவை சஸ்பெண்ட் செய்ய டிஜிபிக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி சாபு இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை