சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி முழுமையாக நிரம்பியது: 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரி (சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம்) முழுமையாக நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. நேற்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 35 அடியாகவும், கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்து முழு கொள்ளளவை அடைந்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் பெருமளவு நிரம்பியது. இதன் காரணமாக உபரி நீரும் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு – ஆந்திரா எல்லையான கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள அம்மம்பள்ளி அணை நிரம்பி வருகிறது. இதனால் அம்மம்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீரானது 8 கி.மீ. தூரம் பயணித்து தமிழ்நாடு எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நீர் பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காப்பேட்டை, சாமந்தவாடா, நெடியம், மற்றும் விடியங்காடு வழியாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் பருவ மழையால் வரத்துக் கால்வாய்கள் மூலம் நீர்வரத்து தொடர்ச்சியாக இருப்பதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 700 கன அடியாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு 1000 கன அடி வீத் உபரி நீர் திறக்கப்படுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் படிப்படியாக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்கள் மற்றும் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்