எலும்பைக் காக்கும் எட்டு உணவுகள்!

நமது உடலின் அஸ்திவாரமே எலும்புகள்தான். இந்த எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முக்கியமாக நமது உடலில் இருக்கும் தசைகள் உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் வயது ஆக, ஆக எலும்புகளின் பலம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே எலும்புகள் பலவீனமாக இருக்கும். ஆனால் தற்போது முப்பது வயதை நெருங்கி விட்டாலே பலருக்கு எலும்பு தேய்மானம் வந்துவிடுகிறது. இதனால் பலரும் மூட்டுவலி, முதுகுவலி, கை வலி என புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பெண்களின் நிலை இன்னும் மோசம். குறிப்பாக தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுத்த காரணமாகவே கால்சியத்தின் தட்டுப்பாடு இன்னும் குறைவாக இருப்பதால் 30 வயதை நெருங்கும் போதே எலும்பு சார்ந்த வலிகள், பிரச்னைகள் அதிகரிக்கின்றன. மேலும் அறுவை சிகிச்சை முறையில் முதுகுத் தண்டில் போடப்படும் ஊசிகளின் வலியும் சேரும்போது இன்னும் வலிகள் அதிகமாகத் தெரியும்.

இதற்கு என்னதான் வழி என்றால், நிச்சயம் நமது உணவுகளில் எலும்பின் வலிமையை அதிகரிக்கும், சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்தே ஆக வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அந்த வகையில் எலும்பைப் பலப்படுத்தும் உணவுகள் சிலவற்றைக் குறித்து பார்க்கலாம். இந்த உணவுகளை காலம் தாழ்த்தி எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் குழந்தைப் பருவம் முதலே எடுத்துக்கொள்ள இன்னும் பலன் அதிகமாகக் கிடைக்கும். குறிப்பாக மாதவிடாய்,குழந்தைப் பேறு, மெனோபாஸ் சமயங்களில் கூட இந்த உணவுகள் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு பலவிதமான வலிகளைக் குறைக்கும். எலும்புகள் உறுதியாக இருக்க, எலும்பு முறிவு ஏற்பட்டால், விரைவில் இணையவும் கால்சியம் சத்து முக்கியம். அதே சமயம் கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி சத்தும் தேவை. இதைத் தவிர இன்னும் சில சத்துக்களும் எலும்பின் வலிமைக்கு முக்கியம்.

கேழ்வரகு: நூறு கிராம் கேழ்வரகில் 35 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. சொல்லப் போனால் சிறுதானியங்களில் மிக அதிக அளவு கால்சியம் சத்தைக் கொண்டது இந்த கேழ்வரகு. எனவே அவ்வப்பொழுது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகி தோசை, ராகி புட்டு என்று சாப்பிட்டு வரலாம். இதனால் எலும்பின் வலிமைஅதிகரிக்கும்.

முருங்கைக்கீரை: முருங்கை்கீரையை எடுத்துக் கொண்டால் பாலில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிக கால்சியம் உள்ளது. எனவே வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில்இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

தயிர்: பாலில் இருந்து பெறக்கூடிய தயிரும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.

கறுப்பு உளுந்து: கறுப்பு உளுந்திலும் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே அடிக்கடி கறுப்பு உளுந்துசாப்பிடுவது நல்லது.

கொள்ளு: கொள்ளிலும் கால்சியம் அதிகம் உள்ளதால் அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடித்தால் எலும்புகள் வலுவாகும்.

அத்திப்பழம்: அத்திப்பழத்திலும் கால்சியம் நிறைந்துள்ளது. நூறு மில்லிகிராம் அத்திப்பழத்தில் இருபத்தி ஆறு மில்லிகிராம் கால்சியம் உள்ளது. எனவே தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வரலாம்.

பீன்ஸ்: ஒரு கப் பீன்ஸ்சில் இருநூறு முதல் இருநூற்று இருபது மில்லி கிராம் அளவு பாஸ்பரஸ் உள்ளது.

பேரீச்சம்பழம்: நூறு கிராம் பேரீச்சம் பழத்தில் முப்பத்து ஒன்பது மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும் இதிலுள்ள மக்னீசியம் சத்தும் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும் என்பதால் தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வரலாம். இதனால் எலும்்புகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.உணவுகளைத் தாண்டி சூரியஒளியிலும் வைட்டமின் டியின் சத்து அதிகமாக இருக்கிறது. கூடுமானவரை சூரிய ஒளிகள் படும்படி தினமும் ஏதேனும் ஒரு நேரம் ஒதுக்கி அதிகாலை வெயிலை உடலில் வாங்கலாம்.

– கவிதாபாலாஜிகணேஷ்

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு