`இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும்’ சென்னை விமான நிலையத்துக்கு 2 வெடிகுண்டு மிரட்டல்: கூடுதல் பாதுகாப்பால் பரபரப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலில் இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகம் மற்றும் 2 தனியார் அலுவலகங்களுக்கும், நேற்று இணையதளம் மூலமாக, ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அதில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த தகவலை சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில், உயர்மட்ட ஆலோசனக் கூட்டம் நடந்தது. அப்போது அந்த இணையதள தகவல்களை ஆய்வு செய்தனர். அது போலியான மிரட்டல் தகவல் என தெரிந்தது. ஆனாலும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிவித்து, கூடுதல் பாதுகாப்புகளை செய்யும்படி கேட்டு கொண்டனர்.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவில் இருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமானத்தில் பயணிக்க வரும் பயணிகளில் சந்தேகப்படுபவர்களை நிறுத்தி அவர்களது உடைமைகளை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கின்றனர். கார் பார்க்கிங் பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்படும் கார்களையும் கண்காணித்து சோதனை செய்கின்றனர். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் அனுப்ப பார்சல்கள் கொண்டு வருபவர்களையும் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே எந்த மெயில் ஐ.டி.யில் இருந்து மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று போலீசார் ஆய்வு செய்தனர். இதில் போலியான 2 மெயில் ஐ.டி.கள் உருவாக்கி அதன் மூலம் இந்த மிரட்டல் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் இந்த மிரட்டல் தகவல்களில், போதை கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக சில வாசகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே போதை கடத்தும் கும்பல், வதந்திகளை பரப்பி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். மிரட்டல் தகவல்களை அனுப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், தீவிர சோதனைக்கு பின் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்று, அந்த மிரட்டல் தகவலில் இருப்பதால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்