கொச்சி ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணி ஒருவர் கைது!

திருவனந்தபுரம்: கொச்சி ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். அதிகாலை புறப்படும் கொச்சி-லண்டன் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்துக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரத்திலுள்ள கொண்டட்டி கிராமத்தைச் சேர்ந்த துகைப் என்ற இளைஞர் மிரட்டல் விடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக சென்னை, மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கைது செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்திய விமானம் இன்று லண்டனுக்கு செல்ல இருந்தது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பையில் உள்ள விமானசேவை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்காததால் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக துகைப் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்