பாம் ரவி உள்பட இருவரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு மர்டர் மணிகண்டன் உட்பட 29 பேர் விடுதலை: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை

புதுச்சேரி: பாம் ரவி உள்பட இருவரை கொன்ற வழக்கில் பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் உள்பட 29 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுதம் வைத்திருந்ததாக ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி முதலியார்பேட்டை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பாம் ரவி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணியுடன் வாணரப்பேட்டை, அலைன் வீதி சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எதிர் திசையில் கும்பலாக வந்த மர்ம கும்பல் பாம் ரவி மற்றும் அந்தோணி மீது வெடிகுண்டுகளை வீசி, வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து மர்டர் மணிகண்டன் உள்பட 31 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் மார்ஷல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து, புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி சந்திரசேகரன் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார். கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட மர்டர் மணிகண்டன் உள்பட 29 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். அதே சமயம் இவ்வழக்கில் தொடர்புடைய தேவேந்திரன், சமீபத்தில் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு தனியாக நடந்து வருகிறது. 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த பிரேம் (41) என்பவருக்கு ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக, 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மர்டர் மணிகண்டனின் 2வது மனைவி பத்மாவதி கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் புடைசூழ பிரமாண்ட பேரணி நடத்தி பாஜவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. இரட்டை கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 29 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் மர்ம நபர் கொலை மிரட்டல்

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு