மும்பை கல்லூரியில் ஹிஜாப்புக்கு தடை பொட்டு, திலகம் வைத்து வருவதை தடை செய்தீர்களா? உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வி

மும்பை: ஹிஜாப்புக்கு தடை விதித்த செம்பூர் கல்லூரியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், கல்லூரி நிர்வாகம் மத நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடாது என்று நினைத்தால் மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைப்பதற்கு ஏன் தடை விதிக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளது. மும்பை செம்பூரில் இயங்கி வரும் ஆச்சார்யா மராத்தே கல்லூரியில் அண்மையில் ஆடைக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.

அதன் படி மாணவர்கள் மதம் சார்ந்த உடைகள் அதாவது ஹிஜாப் போன்ற ஆடைகளை கல்லூரி வளாகத்தில் அணியக் கூடாது என உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் மாணவிகள், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கல்லூரியின் தனிப்பட்ட முடிவில் தலையிட முடியாது எனக்கூறி மாணவர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் ஹிஜாப்புக்கு தடை விதித்த கல்லூரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரியில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் 400க்கும் மேற்பட்ட மாணவிகளால் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்தார்.

அதனை கேட்ட நீதிபதிகள், ‘பெண்களுக்கு தாங்கள் அணியும் ஆடைகளை தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஆடை விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. நாட்டில் பல மதங்கள் இருப்பதை அறிந்திருந்தும் கல்லூரி நிர்வாகம் திடீரென்று இது போன்ற அறிவிப்பை வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது.

மாணவர்களின் மத நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடாது என்று நினைக்கும் கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைப்பதற்கும் திலகம் இடுவதற்கும் ஏன் தடை விதிக்கவில்லை? மாணவர்களின் பெயர்கள் அவர்களது மத அடையாளத்தை வெளிப்படுத்தாதா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

எவ்வாறாயினும், வகுப்பறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிவதையும் கல்லூரி வளாகத்தில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதையும் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தை மாணவர்கள் மீது திணிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

Related posts

பழனி பஞ்சாமிர்த டப்பாக்களில் காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!