பாம்பன் பாலத்தில் ஸ்பிரிங் பிளேட்டுகள் சேதம்: வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதால் விபத்து அபாயம்

ராமேஸ்வரம்: பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்ப்ரிங் பிளேட்டுகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, பாம்பன் மற்றும் மண்டபத்திற்கு இடையே கடல் பகுதியை இணைக்கும் பாலம் உள்ளது. இப்பாலம் அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலம் என அழைக்கப்படுகிறது. பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும்போது, அதிர்வுகளை தடுக்கும் வகையில், சாலை இணைப்பு பகுதியில் இரும்பினாலான ஸ்பிரிங் பிளேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்பிரிங் பிளேட்கள் அவ்வப்போது சேதமடைந்து, வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகின்றன. கடந்தாண்டு சாலைப் பாலத்தில் சேதமடைந்த இரும்பு ஸ்பிரிங் பிளேட்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்தனர்.

இந்நிலையில், சாலை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்கள் மீண்டும் சேதமடைந்து போல்ட், நட்டுகள் கழன்று கிடக்கின்றன. இவைகள் வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குகின்றன. சில நேரங்களில் விபத்துக்கும் வழி வகுக்குகின்றன. அரசு பஸ்கள் செல்லும்போது பலத்த சத்தம் ஏற்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். எனவே, பாம்பன் பாலத்தில் சேதமடைந்துள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்டுகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து