போகியன்று மணவிழா காணும் ஆண்டாள்

நல்லாத்தூர், வரதராஜப் பெருமாள். நெடிதுயர்ந்து நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அபய வரத ஹஸ்தத்தோடு அருட்பாலிக்கிறார். அவர் நேர் பார்வை நம் கவலைகள் கரைகின்றன. மூலவருக்கு அருகிலேயே ஸ்ரீதேவியும், பூதேவியும் வரதனுக்கு இணையாக நின்று அருட்பாலிக்கிறார்கள். மூலவருக்கு முன்புறம் லட்சுமி நாராயணரின் மிகப் பழமையான சிலை ஒன்று உள்ளது. இது ராமரும், சீதையும் இங்கு வந்து சென்றதற்கான ஆதாரச்சிலை. வைகுண்டத்திற்கு ஏகும் முன்பு எல்லோருக்கும் அவ்விருவரும் காட்சி தந்த கோலம்.

இக்கோயிலின் பிரதான விஷயமே, இது திருமண பாக்கியத்தை அளிக்கவல்லது என்பதுதான். ஆண்டுதோறும் இக்கோயிலில் போகிப் பண்டிகையன்று, ஆண்டாள் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் மாலைகளுடன் கூடிவிடுவர். ஸ்ரீவில்லிபுத்தூரில், பெருமாளுக்கு ஆசையோடு மாலையிட்டவள், இங்கு தம்மை போல் காத்திருக்கும் திருமணமாகாத பக்தர்களுக்கு, தன் ஆசியுடன் மாலையை வழங்குகிறாள்.

மாலையை பெற்றுச் சென்றவர்கள், வெகு விரைவில் திருமணமாகி, மறுபடி இங்கு வந்து கண்களில் நீர் மல்க, நன்றி தெரிவிப்பது இங்கு இயல்பாக உள்ளது. அதேபோல, இந்த நாள் மட்டுமல்லாது, ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்தேறும் சீதா கல்யாணத்தின் போது, இக்கோயிலுக்கு வந்து ராமர்சீதை காப்புக் கயிறு கட்டிச் செல்பவர்களுக்கு உடனே திருமணப் பாக்கியம் கிட்டுகிறது.

குறிப்பிட்ட நாளில் செல்ல முடியாதவர்கள், அன்போடு வரதனை தரிசிக்கச் சென்றால்கூட போதும். பூமாலையை வரதராஜரீ; பெருமாளின் திருமேனியில் சாற்றி விட்டாலே போதும், அவர் விரைவிலேயே மணமாலை மணம் வீசச் செய்கிறார். கருவறையிலிருந்து அர்த்தமண்டபம் வந்து பிராகாரத்திலுள்ள தாயார் சந்நதியை தரிசிக்கிறோம். பெருந்தேவித் தாயார் எனும் திருநாமம் பூண்டு, பேரழகாக அமர்ந்திருக்கிறாள் அன்னை.

எல்லோரையும் காத்தருளும் ஆதி மாதாவானதாலும், கருணை புரிவதில் நிகரில்லாதவளாக விளங்குவதால், பெருந்தேவித் தாயார் எனும் திருப்பெயரை கொண்டிருக்கிறாள் போலும். வரதனை மணந்த நாணம் முகமெங்கும் பரவியிருக்கிறது. அருகேயே கஜட்சுமி அனைத்து செல்வங்களையும் தனது கடைக்கண் பார்வை வீச்சிலேயே அருளிடும் வல்லமை பெற்றவள். கஜலட்சுமியை தினமும் தரிசிக்க, கடன்கள் தீரும் என்பது மூத்தோர் வாக்கு.

பிராகார வலம் வந்தால், தனிச் சந்நதியில் வீற்றிருந்து அருட்பாலிக்கும் துர்க்கையை தரிசிக்கலாம். கருடாழ்வார் உடலில் எட்டு நாகங்களோடு காட்சி தருகிறார். இவருக்கு சுவாதி நட்சத்திர நாளில் திருமஞ்சனம் செய்விக்கின்றனர். நல்லாத்தூருக்கு புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பாண்டிச்சேரி – கடலூர் வழியில் தவளக்குப்பத்திலிருந்து 7 கி.மீ. தொலைவும், பாண்டிச்சேரி – விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்