உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இளம் தலைமுறையினரை கூல் லிப் பாதிப்பிற்கு உள்ளாக்கும் : ஐகோர்ட் வேதனை!!

மதுரை:கூல் லிப் போதைப்பொருளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கலாமா என்பது குறித்து கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்ததாக பிணை, முன்பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளைப் பயன்படுத்தும் மாணவா்கள் போதைக்கு அடிமையாகி வருவதாக வேதனை தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கூல் லிப்’ போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் அதற்கு பழகிவிடுவதால், அதைவிட மோசமான போதை பொருட்களை தேடிச் செல்லும் அபாயம் உள்ளது. உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இளம் தலைமுறையினரை கூல் லிப் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் போதைப்பொருள் தொடர்பான பொருட்கள் கிடக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்.கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும், ஆனால் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை. ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் குட்கா, மற்றொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும்?. கூல் லிப் உள்ளிட்டவற்றை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து, நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது?. கூல் லிப் போதைப்பொருளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கலாமா என்பது குறித்து கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு ஆணையிடுகிறோம். மாநில அரசு தரப்பு, கூல் லிப் உள்ளிட்ட குட்கா நிறுவனங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

48 மீனவ கிராமங்களையொட்டி குமரி கடற்பகுதியில் இன்று சஜாக் ஆபரேசன்: கடலோர பாதுகாப்புக்குழும போலீசார் தீவிர பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு விளக்கம்

விருதுநகரில் இன்று காலை பரபரப்பு ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ 15 டூவீலர்கள் எரிந்து நாசம்