விசைப்படகுகளை சீரமைப்பதில் மீனவர்கள் தீவிரம்; மீன்பிடி தடைகாலம் 9 நாட்களில் நிறைவு

மண்டபம்: மீன்பிடி தடைகாலம் 9 நாட்களில் நிறைவு பெற உள்ள நிலையில், மண்டபம் பகுதியில் விசைப்படகுகளை சீரமைப்பதில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜூன் 15ல் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள தென்கடலோரம் மற்றும் வடகடலோரப் பகுதிகளில் உள்ள மீன்பிடி இறங்கும் தளத்திலிருந்து 547 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லுகின்றனர். வாரந்தோறும் சுழற்சி முறையில் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும், திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் பாக்ஜலசந்தி கடலோரப் பகுதிகளிலும் மீன்பிடிக்கச் செல்லுகின்றனர். இதனால், மண்டபம் கடலோரப் பகுதிகள் தினசரி திருவிழா கூட்டம் போல இருக்கும்.

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக தமிழக அரசு அறிவிக்கிறது. இதன்படி இந்தாண்டு கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 61 நாட்களும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், தங்கள் படகுகளை கரையில் இருந்து, கடலில் குறிப்பிட்ட தொலைவில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

படகு உரிமையாளர்கள் கடல் அலைகள், கடல் நீரால் படகுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என, அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். மேலும், சேதமடைந்த படகுகளை கடற்கரையோரத்திற்கு கொண்டு வந்து, பணியாளர்கள் மூலம் சீரமைக்கின்றனர். இதன்படி, மண்டபம் கடலோரப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்களை சீரமைத்தும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சேகரித்தும், வரும் 15ம் தேதி மீன்பிடிக்க செல்ல தயார் செய்து வைத்துள்ளனர். ஜூன் 15ம் தேதி கடலுக்குச் செல்ல உள்ளனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது