படகு குழாம், பூங்காக்கள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.60 கோடி மதிப்பில் கொளவாய் ஏரி புனரமைக்க முடிவு: கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு

செங்கல்பட்டு‌: செங்கல்பட்டு கொளவாய் ஏரியில் படகு குழாம் மற்றும் பூங்காக்கள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.60 கோடி மதிப்பில் புனரமைக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று கொளவாய் ஏரி பகுதியை ஆய்வு செய்தார். செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ள, கொளவாய் ஏரி நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பளவு 882 ஹெக்டேர். நகரமயமாதலால் தற்போது ஆயக்கட்டு பகுதியானது மனைப்பிரிவுகளால் நகரப்புரமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் முழு கொள்ளளவு 476 மில்லியன் கன ஆடி. செங்கல்பட்டு கொளவாய் ஏரிக்கு அதன் சுய நீர்பிடிப்பிலிருந்து வரும் நீர் வரத்தை தவிர்த்து, ஏரியின் மேல்பகுதியில் அமைந்தள்ள குண்டூர் மற்றும் மேலமையூர் ஏரிகளில் இருந்து உபரிநீர் வந்தடைகிறது.

இந்த ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாததாலும், செங்கல்பட்டு நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாலும், ஏரியின் கொள்ளளவு குறைந்தும் மாசடைந்தும் உள்ளது. தொழில்நுட்ப மதிப்பீட்டின்படி தற்போது இந்த ஏரியின் கொள்ளளவு 330 மில்லியன் கனஅடி ஆகும். இந்த ஏரியை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தவும், தூர்வாரி ஆழப்படுத்தவும், படகு குழாம் மற்றும் பூங்காக்கள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏரியை புனரமைக்க ரூ.60 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏரியை ஆழப்படுத்தி புறக்கரை அமைத்து, புறக்கரை நிலங்களை உயர்த்தி 476 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து 650 மில்லியன் கன அடி உயர்த்துதல், ஏரியின் உபரி நீர் போக்கை உச்ச வெள்ள அளவான 4,750 கனஅடி வினாடி உயர்த்தி மீளக்கட்டப்படும் பணி, ஏரியின் கரையை பலப்படுத்துதல், அணுகுசாலை மற்றும் நடை பாலம் அமைக்கும் பணிகள், ஏரியில் தூர்வாரிய மண்ணை கொண்டு மூன்று மண் திட்டு தீவுகள் அமைத்து அதனுள் பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுதல், பொதுமக்கள் சுற்றுலா பயன்பாடு கட்டிடங்கள், ஊர்திகள் நிறுத்தும் தளம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நீர்வள ஆதாரத்துறை இப்பணிகளை மேற்கொள்ளும் நிலையில், செங்கல்பட்டு நகராட்சியின் மூலம் கழிவுநீரை தடுத்து சுத்திகரித்து திருப்பி விட அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாசு கட்டுப்பாட்டு பணிகளும், பொதுப்பணித்துறை ஏரி புனரமைக்கும் பணிகளும் இணையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று கொளவாய் ஏரியை ஆய்வு செய்தார். மேலும், புனரமைப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், சார் – ஆட்சியர் நாராயண சர்மா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர்கள் மகேந்திரன், அம்பலவாணன், ரயில்வே உதவி இயக்குநர் சரவணன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?