Saturday, September 28, 2024
Home » கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-ரத்தமும் தக்காளி சட்னியும்

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-ரத்தமும் தக்காளி சட்னியும்

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

சமீபமாகக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தன் மகனின் கண் பரிசோதனைக்காக என்னிடம் வந்திருந்தார். அவரது மகனுக்கு சிறு வயது முதலே இருந்த பார்வை குறைபாடு கவனிக்காமல் விட்டதால் குறிப்பிடத் தகுந்த அளவில் பாதிப்பு இருந்தது. ஒரு கண் மாறு கண்ணாகவும், இரண்டு கண்களும் சோம்பல் கண்களுமாக (lazy eyes) இருக்கும் நிலை இருந்தது. அவனுக்கு முறையான கண்ணாடியை அணிவித்து கடந்த சில மாதங்களாக மாறு கண்ணிற்கான பயிற்சிகளும் கொடுத்து வருகிறோம். மூன்று மாதங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மகனின் சிகிச்சையை பெற்றோர் பொறுப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடித்து வருகின்றனர்.

மகனின் பரிசோதனை முடித்தவுடன் ‘‘எனக்கும் பார்வையில் குறைபாடு இருக்கிறது, கிட்டப் பார்வை, தூரப்பார்வை இரண்டுமே குறைவாகத்தான் தெரிகிறது, எனக்கும் பரிசோதனை செய்யுங்கள்” என்றார் பேராசிரியர். அவரைப் பரிசோதித்ததில் அவர் கொண்டு வந்திருந்த பழைய கண்ணாடியே சரியாகப் பொருந்தியது., ‘‘இதையே தொடர்ந்து அணிந்து கொள்ளுங்கள்” என்று நான் சொல்ல, ‘‘கண்ணாடி போட்டா நல்லா தான் தெரியுது.. ஆனா நான் சில வீடியோஸ் பார்த்தேன். அதுல கண்ணாடி போட வேண்டாம்னு சொன்னாங்க” என்றார்.

யார் சொன்னது, எந்த வீடியோஸ் என்று நான் கேட்க, பிரபலமான ஹீலர் ஒருவரின் பெயரைச் சொன்னார். அறிவியல் பூர்வமாகப் படித்து, பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் சில போலி ஹீலர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூடநம்பிக்கைகளையும், கிளப்பி விட்டிருக்கும் புரளிகளையும் மக்கள் மனதிலிருந்து களையும் விதமாக விளக்கம் கூறுவது மிகுந்த சவாலாகத்தான் இருக்கிறது. அந்த வீடியோவில் என்ன சொன்னார் என்பதைக் கேட்டுவிட்டு அதற்கு மாற்றாக சுமார் அரை மணி நேரம் கண் மருத்துவம் குறித்து ஒரு மினி விரிவுரையே நிகழ்த்தி முடித்தேன். இறுதியாகப் பேராசிரியர் தனக்குக் கண்ணாடி தேவை என்பதை ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே மாறுகண் சிகிச்சையின் போது அவரது மகனுக்கு ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அலைபேசியில் புகைப்படமாக எடுத்து வைக்குமாறு அவரிடம் சொல்லியிருந்தேன். அவற்றைத் தற்போது ஒப்பிட்டு காட்டி, ‘‘உலகில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருவியான கண்ணாடியாலும், நீங்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்தியதாலும் தான் இப்படி மூன்றே மாதங்களில் வியக்கத்தக்க மாற்றம் உங்கள் மகனிடம் வந்திருக்கிறது.

அனுபவப்பூர்வமாக அதை உணர்ந்த நீங்களே கண்ணாடி அணிந்தால் கெடுதல் என்பதை நம்பலாமா?” என்றேன். அதன் பின் அவரைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணாடியுடனே தென்படுகிறார்!இதே போல சில ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவரான என் தோழி ஒருவர் தன் மகள் கண்ணாடி அணிந்து இருப்பது குறித்து என்னிடம் விவாதித்தார். அவரும் மருத்துவர்தான் என்றாலும் வேறொரு துறையில் நிபுணர். ஒரு வாட்ஸ்அப் மெசேஜை எனக்கு ஃபார்வேர்ட் செய்து, ‘‘இந்த மையத்தில் போய் ஒரு வாரம் தங்கியிருந்து exercise பண்ணினா கண்ணாடி போட வேண்டாம்னு சொல்றாங்க. ட்ரை பண்ணிப் பார்க்கவா?” என்றார்.

அந்த அளவிற்கு போலி வாக்குறுதிகளும் விளம்பரங்களும் மக்களின் கண்களை கவர்கின்றன. எப்போதுமே இந்த உலகில் நல்ல விஷயங்கள் தாமதமாகத் தான் மக்களைச் சென்றடையும். போலி ஆசாமிகள் எளிதாகத் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்திவிடுவார்கள். தோழி குறிப்பிட்ட மையத்துடன் தொடர்புடையவர்கள் chain of hospitals என்று சொல்வார்களே, அதுபோல கண் மருத்துவமனை

களையும் நடத்திவருகிறார்கள். அங்கு அறிவியல் பூர்வமாகவே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ், கண் அறுவை சிகிச்சை அனைத்தும் மிகவும் சிறப்பாக செய்யப்படுகிறது. விளம்பரத்தில் சொல்வது போல் பயிற்சி செய்து கண்ணாடியைத் தவிர்த்து விடலாம் என்றால் எதற்காக இத்தனை மருத்துவமனைகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று தோழியிடம் கேள்வி எழுப்பினேன். ‘‘அட! ஆமால்ல?!” என்றார்.

எங்கள் பகுதியில் இருக்கும் சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனம் அது. அதில் இருப்பவர்கள் அனைவரும் படித்தவர்களே. ஆண்டுக்கு ஒரு முறை பெரிய கண் மருத்துவமனை ஒன்றுடன் இணைந்து கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தி பல பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உதவுபவர்கள். ஒரு முறை மாற்று மருத்துவம் செய்கிறோம் என்று வந்த ஒரு கும்பலுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். தங்களது சாதனைகள் என்று சில புகைப்படங்களைக் காட்டிய அந்தப் போலி ஆசாமிகள், ‘‘ஒரு சொட்டு மருந்தை அனைவருக்கும் கண்களில் ஊற்றுவோம். அதனால் கண்ணில் இருக்கும் புரை கரைந்து போய்விடும்” என்று சொல்ல, சேவை நிறுவனம் முகாமிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

புரை என்பது முதுமையால் ஏற்படுவது. கண்களின் உள்ளிருக்கும் லென்ஸ் கெட்டியாவதும், நிறம் மாறி விடுவதும் வயோதிகத்தில் ஏற்படும் ஒரு இயற்கை மாற்றம். அதை மேற்புறத்தில் ஊற்றப்படும் எந்த ஒரு மருந்தாலும் சரி செய்ய முடியாது. இலவசமாக மருந்து ஊற்றுகிறார்கள் என்றவுடன் சுமார் 200 பேருக்கும் மேலாக அங்கு சென்று மருந்தை ஊற்றி வந்திருக்கிறார்கள். அதில் பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்கள்.

மருந்து ஊற்றும் முன்பாக கவர்ச்சிகரமாக ஒரு சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார் அந்தப் போலி மருத்துவக் குழுவின் தலைவர். அதில் மயங்கி அதன் பின் சொட்டு மருந்தும் ஊற்றிக்கொண்ட பலருக்குப் பார்வை தெளிவாக ஆனது போன்ற ஒரு தோற்றம் இருந்திருக்கிறது. ‘‘மத்தவங்க எல்லாம் மறந்து ஊத்தின உடனே கண்ணு நல்லா தெரியுதுன்னு சொன்னாங்க.. எங்களுக்குத் தான் இப்படி ஆயிடுச்சு. என்னவோ எங்க கெட்ட நேரம்’’ என்றார் ஒவ்வாமைக்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பெரியவர்.

முறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கும் ஒவ்வாமை வரக்கூடும். அவற்றுக்கு நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகளும் உள்ளன. ஒவ்வொரு மருந்தும் பலகட்ட சோதனைகளுக்குப் பின்பே மக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. அதைக்கூட ஆயிரம் முறை யோசித்தே பயன்படுத்துபவர்கள், இலவசமாகக் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்தால் சென்று வினையை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்தனர். ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைந்து நின்றனர்.

தொடர்ந்து சொட்டுமருந்து போடுவது கண்களுக்கு நல்லது என்று பலரும் நினைக்கின்றனர். இதுவே ஒரு மூடநம்பிக்கை தான். அறுவை சிகிச்சை முடிந்து குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டும் சொட்டு மருந்து போட்டாலே போதுமானது. மருத்துவர் ஒன்றரை மாதம் மருந்து போட சொன்னால் சிலர் தாங்களாகவே மாதக் கணக்கில், வருடக் கணக்கில் அதே மருந்தை வாங்கி பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதிகமான மருந்து ஆபத்தையே விளைவிக்கும். அறுவை சிகிச்சை செய்து கொண்டாலே ஆயுள் முழுமைக்கும் மருந்து போட வேண்டும் என்று சிலர் நினைத்திருக்க, வேறு சிலரோ மிக அவசியமான மருந்துகளைத் தவறான நம்பிக்கைகள் காரணமாக நிறுத்தி விடுகிறார்கள்.

உதாரணமாக, உயர் கண் அழுத்த நோய்க்கு சொட்டு மருந்துகள் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். கண் பார்வையைக் காப்பாற்றும் உன்னதமான கண்டுபிடிப்புகள் அவை. சமீபத்தில் முதியவர் ஒருவர், ‘‘எண்ணெய் தேய்த்து குளித்தால் கண்ணு பிரஷர் குறைஞ்சுடும்னு சொன்னாங்க. அதனால வாரத்துக்கு ரெண்டு தடவை எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறேன். இப்ப மருந்தை நிறுத்திட்டேன்” என்று வந்தார். அவருக்கு கண் அழுத்தம் அபாயகரமான அளவை எட்டி இருந்தது. நரம்பிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதைப்போன்ற போலி கருத்துகளையும் மருத்துவ முறைகளையும் மனிதர்களுக்குள் திணிக்கும் சிலரின் பின்னணியை மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம் இது. பல இயற்கை பொருட்களை சந்தைப்படுத்தி, இதன் மூலமாகவே எல்லா நோயிலிருந்து விடுதலை பெறலாம் என்று விளம்பரம் கொடுக்கும் நிறுவங்களின் தலைவர்கள் தங்களுக்கு உடலுக்கு கோளாறு வருகையில் என்ன விதமான சிகிச்சையை நாடுகிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும்.

சுமார் 50 ஆண்டு காலமாக பாரம்பரிய மருத்துவம் பார்த்த மருத்துவருக்கு ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டபோது மிகவும் பதறிவிட்டார். என்னுடைய இரவுப் பணியின் போது அவர் அழைத்து வரப்பட்டார். அவரது மனைவி சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ‘‘இவரே ஒரு டாக்டர் தாங்க. இந்த மாதிரி பிராப்ளமுக்கெல்லாம் இவரே நிறைய மெடிசன் கொடுத்திருக்காரு. இப்ப என்னவோ தெரியல ரொம்ப பயப்படுறார்” என்றார்.

நல்லவேளையாகத் தன் மருத்துவ முறை தனக்கு பயன்படாது என்பதையாவது புரிந்து வைத்திருக்கிறாரே என்று நினைத்த நான் ‘‘அவருக்கு வந்திருக்கிறது தீவிரமான ஹார்ட் அட்டாக். உடனடியாக சிகிச்சை குடுக்கணும்” என்று விளக்கி ரத்தநாள அடைப்பை சரி செய்வதற்கான மருந்தை உடனடியாக செலுத்தினேன். இதைப்போன்ற சூழ்நிலைகள் பலவற்றை சந்திக்க நேர்கையில், ‘‘உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா தக்காளி சட்னியா?!” என்ற வைகைப்புயல் வடிவேலுவின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது!

You may also like

Leave a Comment

16 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi