39 தொகுதிகளையும் கண்காணிக்க மாநில செலவின பார்வையாளராக ஓய்வு ஐஆர்எஸ் அதிகாரி நியமனம்: அமலாக்கத்துறை, வருமானவரி துறையினருடன் இன்று ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிற கட்சி தலைவர்களை தரம் தாழ்த்தி பேசுவதை நட்சத்திர பேச்சாளர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் வீடியோ ஆதாரங்கள் மிக முக்கியமானதாகவும், நடவடிக்கை எடுப்பதற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்களில் வெளியாகும் படங்களை, அவை முந்தைய தேர்தல் சம்பந்தப்பட்டது என்று மறுக்கின்றனர். எனவே தேர்தல் நடத்தை விதி மீறலை படம் எடுப்பவர்கள், இனி சி-விஜில் செயலி (ஆப்) மூலம் எடுத்து அதை பதிவேற்றம் செய்யுங்கள். புகார்அனுப்புகிறவர்களின் பெயர், விவரம் வெளிவராது.
இந்த செயலியை பயன்படுத்தி இதுவரை 1,822 புகார்கள் வந்தன. அதில் 1,803 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வருகிற 13ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். வாக்காளர் வழிகாட்டி கையேடு விநியோகமும் நடந்து வருகிறது. அதன் மூலம் வாக்குச்சாவடி இருப்பிடத்தை அறிந்துகொள்ளலாம். தேர்தல் பணியின்போது இறந்தால் நிவாரண உதவியாக ரூ.15 லட்சம், பெரிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.7.50 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. போக்குவரத்து காவலர் ஒருவர் பணியின்போது இறந்தது தொடர்பாக அவருக்கு நிவாரணம் கேட்டு, தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தீவிரவாத தாக்குதல்களில் இறப்பு ஏற்பட்டால் நிவாரணம் இரு மடங்காக வழங்கப்படும்.

அரசியல் தலைவர்களை வரவேற்று, நாளிதழ்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அளிக்கும் விளம்பரங்களுக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் தேவை. ஆனால் தலைவர்களை வரவேற்று தனி நபர்கள், நாளிதழ்களில் தரும் விளம்பரங்களுக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் தேவையில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் கண்காணிக்க பிரத்யேகமாக மாநில செலவின பார்வையாளராக கேரளாவில் ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பி.ஆர்.பாலகிருஷ்ணனை, இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. அவர் சென்னை வந்து என்னை நேற்று சந்தித்தார். ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள 58 செலவின பார்வையாளர்களின் செயல்பாடுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் என்னுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை, ஜிஎஸ்டி, சுங்கம் மற்றும் கலால்வரி துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமலாக்க முகமைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் மாநில செலவின பார்வையாளரும் பங்கேற்பார். காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி என 2 பிரிவாக இந்த கூட்டம் நடத்தப்படும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் நடத்துகிறார். அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பார்கள். 4ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன், எனது தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதிலும் மாநில செலவின பார்வையாளர் பங்கேற்பார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு