கருப்புச்சட்டை போட்டு அமளி பண்ணுவதின் காரணம் இதுதான் என்கிறார்: wiki யானந்தா

‘‘பேரவைக்கு இலைக்கட்சி தலைவரு கருப்புச்சட்டையோடு போனதில் மறைந்திருக்கும் மர்மம் தெரியுமா?..’’ என கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் கட்சியிலும், அரசியலிலும் ரொம்பவுமே நெருக்கடியில் சிக்கியிருந்தாரு.. ஒரு பக்கம் தேனிக்காரரை கட்சியில சேர்க்கணுமுன்னும், இன்னொரு பக்கம் சின்ன மம்மி கட்சியை பிடிக்க போறாருன்னும் கடும் நெருக்கடி வந்துக்கிட்டே இருந்துச்சாம்.. அதேசமயம், தேர்தலில் 40 இடங்களில் தோல்வியை தழுவியதில் 7க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட்டும் பறிபோச்சு.. கூடுதலாக விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பால் சாதாரண தொண்டர்கூட விமர்சனம் செய்ய தொடங்கிட்டாங்க.. இப்படி எல்லா பக்கமும் நெருக்கடியில சிக்கியிருந்தாரு சேலத்துக்காரர்.. இந்த நேரத்தில் கள்ளக்குறிச்சியில நடந்த அசம்பாவித சம்பவ வாய்ப்பை நல்வாய்ப்பா பயன்படுத்தி உள்ளே குதிச்சிடணும்னு சகாக்கள் ஐடியா கொடுத்தாங்களாம்.. இது ரொம்ப நல்லா இருக்கேன்னு நினைச்ச இலைக்கட்சி தலைவரு கள்ளக்குறிச்சிக்கு விரைந்து போனதோடு மட்டுமல்லாமல் சட்டசபையிலும் கருப்பு சட்டையோடு குதிச்சிட்டாராம்.. அதுவும் மக்களுக்கு பயன்படும் வகையிலான கருத்துகளை சபையில் சொல்ல சொல்லியும் அதை இலைக்கட்சி தலைவர் கேட்கலையாம்.. அதுவும் 23 ஆண்டுகளுக்கு முன்பு இலைக்கட்சி ஆட்சியில சாராயத்துக்கு 52 பேர் பலியானாங்களாம்.. அந்த விவகாரத்தை சொல்லி ஆளுங்கட்சிக்காரர்கள் பதிலுக்கு தாக்கிடுவாங்களோன்னு பயப்படுறாராம்… அதனால தான் கருப்புச்சட்டையில அமளிதுமளினு நடந்துக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பட்டாசு கடை அனுமதிக்காக விண்ணப்பம் கொடுத்த உரிமையாளர்களை எல்லாம் தாமரை கட்சி ஊராட்சி தலைவர் தவிக்க விடுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் காராச்சேவுக்கு பெயர் போன ஊருக்கு அருகே மலை என முடியும் ஊராட்சியின் தலைவராக தாமரை கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார். இந்த ஊராட்சி பகுதியில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் புதிதா முளைச்சிருக்காம்.. இந்த கடைகளுக்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டும்னா கடைக்கு தலா ரூ.1 லட்சம் மாமூலாக கொடுக்க வேண்டும்னு ரொம்பவே கறார் காட்டுகிறாராம்.. பணம் கொடுக்காதவர்கள், குறைவாக கொடுத்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுக்காமலேயே, ‘இன்று போய் நாளை வா’ என்பதுபோல ஜவ்வாக இழுத்தடிக்கிறாராம்.. பட்டாசு பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கடைக்கு அனுமதி கிடைப்பதில் வீணாக தாமதம் ஏற்படுவதால் கடை உரிமையாளர்கள் எப்போது அனுமதி கிடைக்கும்னு புரியாம தவிச்சிக்கிட்டு இருக்காங்களாம்.. இதுதொடர்பா சம்பந்தப்பட்ட இடத்திற்கு புகார் அனுப்பவும் தயாராகி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓசி தக்காளிக்காக அடிதடியில் இறங்கிய தாமரை பார்ட்டியின் யூத் விங்க் நிர்வாகியை கட்சிக்காரங்களே வசைபாடுறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வாணி பாடிய ஊருக்கு பக்கத்துல, தக்காளி வியாபாரி ஒருத்தரு ஆந்திராவுக்கு போயி தக்காளிய மொத்தமா வாங்கிவந்து வியாபாரிங்களுக்கு சேல்ஸ் செய்வாராம்.. சில நாட்களுக்கு முன்னாடி வழக்கம்போல தக்காளி சேல்ஸ் செஞ்சிருக்காரு.. அப்போ, தாமரை பார்ட்டியில யூத் விங்கை சேர்ந்த ஒருத்தரு, ப்ரியா தக்காளி கேட்டதாக சொல்றாங்க.. ஆனா வியாபாரியோ காசு கொடுத்தால் தான் தக்காளி தரமுடியும்னு கறாரா சொல்லியிருக்காரு.. இதுல கோபமடைஞ்ச தாமரை பார்ட்டி நிர்வாகி, ஓசி தக்காளி கேட்டு அந்த வியாபாரியை சரமாரியா தாக்கிட்டாராம்.. இப்ப தாமரை பார்ட்டி நிர்வாகி மேல விசாரணை போய்கிட்டிருக்குதாம்.. தக்காளிய போய் ஓசில கேட்டு அசிங்கப்படுத்திட்டானேன்னு கட்சிக்குள்ளவே வசைபாடி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எல்லாத்தையும் மேலிருப்பவன் பாத்துப்பான் பாத்துப்பான்னா கீழிருப்பவன் என்ன செய்வான்னு கொந்தளிச்ச இலைக்கட்சி மாங்கனி நகர வட்டச்செயலாளர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் மாங்கனி மாநகரில் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஒன்னு நடந்துச்சாம்.. இதில் நடக்கப்போற ஆர்ப்பாட்டத்துல தலைநகரே நம்மை எட்டிப்பார்க்கும் வகையில் ஆர்ப்பரித்து வரணும். இதற்கு வட்டச் செயலாளர்கள் பெருமளவு கூட்டத்தை கூட்டிக்கிட்டு வரணுமுன்னு மைக்கை பிடிச்ச மா.செ. அறைகூவல் விடுத்தாராம்.. அப்போது ரொம்ப நாளாவே கேட்டே ஆகணுமுன்னு காத்துக்கிட்டிருந்த வட்ட செயலாளர் ஒருவர், எல்லாத்தையும் மேலிருப்பவன் பாத்துப்பான் பாத்துப்பான் என்றால் கீழே இருப்பவன் என்ன செய்வான் என்பது போன்ற வசனத்தை கேட்டுட்டாராம். ‘‘எல்லா கூட்டத்திலும் வட்டச்செயலாளர் ஆட்களை அழைத்து வரணுமுன்னு சொல்றீங்க.. ஆனா பேரவை செயலாளர் என்னைக்காவது யாரையாவது அழைச்சுட்டு வந்திருக்காரா? 17 சார்பு அணி நிர்வாகிகள் இருக்காங்க.. ஆட்சி இருந்தப்போ கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பை வாங்கிட்டு, அரசு காரில் வலம் வந்தவர்கள் எல்லாம் எங்கே போனாங்க?’’னு வரிசையாக கேள்வி கேட்டுக்கிட்டே மனசில் இருந்த பாரத்தை இறக்கிட்டாராம். இதைக்கேட்ட வட்டச்செயலாளர்கள் ரொம்பவே சந்தோசப்பட்டாங்களாம்.. இதனால ஷாக்கான பேரவை நிர்வாகியோ, இந்த கட்சிக்காக ரெண்டு முறை ஜெயிலுக்கு போயிருக்கேன், தையல் மிஷின் கொடுத்திருக்கேன்னு அவரது சாதனைகளை அடுக்கிக்கிட்டே இருந்தாராம்.. அனைவரையும் மா.செ. சமாதானப்படுத்தியிருக்காரு.. ‘‘ஆட்சியில இருக்கும்போது சம்பாதிச்ச அனைவரும் ஒதுங்கிட்டாங்க.. வெறுங்கையுடன் இருக்கும் வட்டச்செயலாளர்களை வச்சி கூட்டத்தை கூட்டிக்கிட்டுவா கூட்டிக்கிட்டு வான்னா அவன் பணத்துக்கு எங்கே போவான். கூட்டத்துக்கு வராத நிர்வாகிகளை நீக்கிட்டு புதியவர்களுக்கு இடம் கொடுக்கணுமுன்னு கூட்டத்திலேயே முணுமுணுப்பும் எழுந்ததாம்…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது