கருப்பு சட்டை அணிந்து பேரவையில் திடீர் அமளி: அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

சென்னை: சட்டப்பேரவையில் திடீர் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் செய்யப்பட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். ஜி.கே.மணி தலைமையில் பாமக உறுப்பினர்களும் கருப்பு சட்டையில் வந்தனர். அவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரம் தொடங்குகிறது. அமைச்சர்கள் பதில் சொல்லலாம் என்றார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, கோஷம் எழுப்பினர். கையில் பதாகைகளுடன் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையின் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் அவையில் கூச்சலிட்டதால் அவையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை தொடர்ந்து எச்சரித்த சபாநாயகர் அப்பாவு அவையிலிருந்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனே, அவைக்காவலர்கள், அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றினர். தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பிய ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதையடுத்து அவை முன்னவர் துரைமுருகன் கூறியதாவது: இன்றைக்கு பேரவையில் ஒரு விரும்பத்தகாத நிகழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது உறுப்பினர்கள் நடத்தியிருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவருக்கு பிரச்னை குறித்து பேச, வாதாட உரிமை உள்ளது. ஆனால் அது விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். கேள்வி நேரம் என்பது, மிக முக்கியமானது. கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. இதெல்லாம் அவர்களுக்கு தெரியும். எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்தவர். அவருக்கு சட்டப்பேரவையின் விதிகளும், நடவடிக்கைகளும் தெரியும். ஆனால், இன்றைக்கு அவர், இவ்வாறு செயல்பட்டுள்ளார்.

நேரமில்லா நேரத்தில்தான் பிரச்னைகள் குறித்து பேச முடியும். அதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு விஷச்சாராயம் குறித்தோ, ஆட்சி குறித்தோ பேச உரிமை உண்டு. எல்லாம் தெரிந்தவர்கள், தெரிந்திருந்தும் கேள்வி நேரத்தில் இப்படி அவையில் நடந்து கொள்வது வருத்தத்தை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வெளியில் போவதிலேயே அவர்கள் முனைப்புடன் நடந்து கொண்டனர் என்றார். இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்தவர். இதுபோன்ற கவன ஈர்ப்பு பிரச்னைகளை நேரமில்லா நேரத்தில்தான் பேச முடியும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளார்கள். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை.

மறுக்காத பட்சத்தில், அவர்கள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். சட்டப் பேரவைக்குள் பதாகைகளை கொண்டு வந்து, அவைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் அனுமதியின்றி இங்கு நடந்துகொண்டது அவை மாண்பை மீறுவதாக இருந்ததால் அவை முன்னவரின் கோரிக்கையை ஏற்று இன்று ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் அவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிடுகிறேன். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது, சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், முதல் ஆளாக வெளியில் வந்து, தனியாக வாயில் எண் 4 முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்றார். உடனடியாக போலீசார் அவரிடம், தர்ணா செய்ய அனுமதி இல்லை என்று எழுந்து போகும்படி கூறினர்.

ஆனால் அவர் தனி ஆளாக தர்ணாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்ய அவரை தூக்கி, போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இந்த தகவல் வெளியில் வந்து கொண்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு தெரியவந்ததும் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உதயக்குமாரை மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் நிருபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்த பிறகு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பேரவையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, பாஜ, அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் பேசினர். தொடர்ந்து அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related posts

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்