சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுப்பு கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்: விழாவை தமிழக அரசு,  பேராசிரியர் சங்கங்கள் புறக்கணிப்பு

திருப்பரங்குன்றம்: காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த தமிழ்நாடு கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 184 பேர் கைது செய்யப்பட்டனர். விழாவை தமிழக அரசு, பேராசிரியர் சங்கங்களை சேர்ந்த சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். மாணவர்கள் சிலரும் பட்டம் பெற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தும், கவர்னர் கையெழுத்து போடாமல், அதை நிராகரித்து விட்டார். இதனால், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்கலைக்கழக அலுவலக பணியாளர்கள், பேராசிரியர்கள் உட்பட பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பல்வேறு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பதால், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்க இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவை புறக்கணித்தார்.

பட்டமளிப்பு விழாவி பங்கேற்கும் ஆளுநர் எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைகழக வளாகத்தில் உள்ள மு.வ. அரங்கில் நேற்று காலை நடந்தது. கவர்னருக்கு கடும் எதிர்ப்பு இருந்ததாலும், கடந்த வாரம் சென்னையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தாலும் பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த கவர்னர் ஆர்.என்.ரவி சாலை மார்க்கமாக காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்றார்.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், பல்கலைக்கழகம் அருகே, மதுரை – தேனி ரோட்டில் காலை 9 மணியளவில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட 21 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் கவர்னரின் விரோதப் போக்கை கண்டிப்பதாகவும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவ்வழியாக வந்த கவர்னரை பார்த்து ஆவேசமடைந்த கட்சியினர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து பெண்கள் உள்ளிட்ட 184 பேரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். பலத்த எதிர்ப்புக்கு இடையே பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் 62,598 மாணவர்கள், 71,328 மாணவிகள் உள்ளிட்ட 1,34,570 பேர் பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுகின்றனர். இதில் 1,11,144 பேர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் படித்து செமஸ்டர் முறையில் தேர்வு எழுதியும், தொலைநிலை கல்வி இயக்ககம் மூலம் 22,782 பேரும் பட்டம் பெறுகின்றனர்.

மேலும் 640 பேர் முனைவர் பட்டங்களும், அறிவியலில் 2 பேருக்கு முது முனைவர் பட்டமும், இலக்கியத்தில் ஒருவருக்கு முது முனைவர் பட்டமும் பெறுகின்றனர். இதில் பதக்கம், முனைவர் பட்டம் உட்பட 788 பேருக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பு தெரிவித்த கவர்னரை கண்டித்து, சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் மொத்தம் 11 பேர் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர். மாணவர்கள் சிலர் மற்றும் முனைவர் பட்டம் பெறும் பேராசிரியர்கள் 2 பேரும் பட்டங்களை கவர்னர் கையால் வாங்காமல் புறக்கணித்தனர். இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

* தமிழக அரசை பாராட்டிய மும்பை துணைவேந்தர்
மும்பையில் உள்ள ஹோமி பாபா ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பெண்கள் கல்வி, பொருளாதரம் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். கல்வி உரிமை சட்டத்தின் மூலம் 14 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு கட்டாய கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. உயர்கல்வியில் பெண்களின் பங்கு முக்கியமானது.

ஏழ்மை, வறுமையை ஒழிக்க வேண்டும். யுரேனியம் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி செய்யமுடியும், தோரியம் 30 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. இதையும் நாம் மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்க்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவது பாராட்டுக்குரியது. மாதந்தோறும் வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித் தொகையால் பெண்களின் உயர்க்கல்வி விகிதம் அதிகரிக்கும்’’ என்றார்.

* முனைவர் பட்டம் வாங்க மறுத்தவர்களுக்கு பாராட்டு
மதுரை எம்பி சு.வெங்கடேசனின் எக்ஸ் தள பதிவில், ‘‘கவர்னரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேராசிரியர் சுரேஷ், பேராசிரியர் சி.ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ‘‘விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காத ஜனநாயக விரோதி ஆர்.என்.ரவிக்கு எதிராக ஜனநாயகபூர்வமான அறவழியில் கருப்புக்கொடி காட்டி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி இருக்கின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.

* கருப்பு பேக், சட்டைக்கு தடை
கவர்னர் வருகைக்காக காமராஜர் பல்கலைக்கழக பகுதியில் மட்டுமே எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில் 300க்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். கவர்னர் பாதுகாப்பு காரணங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்த அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். விழாவிற்கு வந்தவர்களில் கருப்பு சட்டை அணிந்தவர்கள், கருப்பு பேக் கொண்டு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திமுக கொடியுடன் வந்த காரை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளதாக கூறியபோதும், திமுக கொடியை அகற்றினால் மட்டுமே அனுமதி எனக்கூறி, திமுக கொடியை அகற்றிய பிறகே போலீசார் அனுமதித்தனர். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அழைப்பிதழ் உள்ளவர்களையே விழாவில் பங்கேற்க அனுமதித்தனர். குழந்தைகளை அழைத்து வரவும், செல்போன் கொண்டு வரவும் அனுமதிக்கவில்லை.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்