மஹூவா மொய்த்ரா எம்பி மீதான லஞ்ச குற்றச்சாட்டு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன் பாஜ எம்பி ஆஜர்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீதான லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹ்த்ராய் நேற்று நாடாளுமன்ற குழு முன் ஆஜராகினர்.
ஜார்க்கண்ட் மாநில, பாஜ எம்பி நிஷிகாந்த் துபே கடந்த 15ம் தேதி கூறுகையில்,‘‘ திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மஹூவாமொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கி கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார். மக்களவையில் அவர் கேட்ட மொத்தம் 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி சம்மந்தப்பட்டது. அதானி நிறுவனத்தை குறி வைத்து இவ்வாறு செயல்படுகிறார். அவர் பணம் பெற்றதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இவற்றை மஹூவாவின் முன்னாள் நண்பரான வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹ்த்ராய் என்பவர் கொடுத்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் கொடுத்துள்ளேன்’’ என்றார். குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த வினோத்குமார் சோன்கர்(பாஜ) தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற குழு முன் ஜெய் ஆனந்த் தேஹ்த்ராய் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவருடைய வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர். அதே போல் பாஜ எம்பி நிஷிகாந்த் துபேயும் குழு முன் ஆஜரானார். 3 நாட்களுக்குள் இது சம்மந்தமான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி நிஷிகாந்திடம் நாடாளுமன்ற குழு கூறியது. மஹூவா மொய்த்ரா வரும் 31ம் தேதி குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related posts

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை