பாஜ கொடியுடன் பரிசுகள், பணம் சிக்கியது: லாரி, கார் பறிமுதல்

மதுரை: மதுரை, கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மதுரை – நத்தம் சாலையில், கடவூர் அருகே பறக்கும்படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் நேற்று சோதனை நடைபெற்றது. அப்போது, மதுரையில் இருந்து நத்தம் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அதில், பாஜ கட்சிக்கொடிகள் மற்றும் பரிசு பொருட்கள், பட்டாசுகள் இருந்தது. அவற்றை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் ஏதும் லாரியில் வந்தவர்களிடம் இல்லை. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் பரிசு பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

லாரியில் பாஜ கட்சி கொடிகள் இருந்ததால், வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்கள் வழங்க கொண்டு செல்லப்பட்டதா என, அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதேபோல், மதுரை மாவட்டம் சக்குடி அருகே பறக்கும்படையினர் அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரிலும் பாஜ கொடி கட்டப்பட்டு இருந்தது. காரில் இருந்த உடையப்பன்(61) என்பவரிடம் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை என்பதால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Related posts

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு