பாஜ கூட்டணியில் தமாகாவுக்கு 3 சீட்: 1 ராஜ்யசபா சீட்டும் சேர்த்து கேட்கும் ஜி.கே.வாசன்

சென்னை: பாஜ கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகா இருந்து வருகிறது. ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் இருந்து பெற்றுத் தந்ததும் பாஜதான். இந்த சூழ்நிலையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. அதிமுக, பாஜ தனித்து போட்டியிடுவதால் ராஜ்யசபா சீட் கொடுத்த அதிமுக உடன் கூட்டணி வைப்பதா அல்லது வாங்கி தந்த பாஜவுடன் கூட்டணி வைப்பதா என்ற இழுபறியில் தமாகா இருந்தது. இந்நிலையில், பாஜ மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தமாகா, பாஜ கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது.

அதிமுக இல்லாத பாஜ கூட்டணியில் இணைய உதிரி கட்சிகளே யோசித்த நிலையில், முதல் கட்சியாக தமாகா இணைந்தது குறிப்பிடத்தக்கது. பாமக, தேமுதிக கட்சிகளை எப்படியாவது கூட்டணிக்கு இழுத்து விட வேண்டும் என பாஜ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்றி விட வேண்டும் என்று அண்ணாமலை திட்டம் போட்டிருந்தார். ஆனால் பாஜவுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வராததால் அவரது திட்டம் தவிடு பொடியாகிவிட்டது. இதனால் பாஜவில் தற்போதுள்ள கட்சிகள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க தயார் நிலையில் உள்ளது.

அதன்படி தமாகா 5 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்துள்ளது. அதில் 3 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுள்ளது. டெல்டா பகுதியான மயிலாடுதுறை தொகுதியை என்.ஆர்.நடராஜனுக்கும், கொங்கு மண்டலமான திருப்பூர் தொகுதியை முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகருக்கும், தென்மாவட்டமான திருநெல்வேலி தொகுதியை மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லசுக்கும் ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளார். இதுதவிர ஒரு ராஜ்யசபா சீட்டை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பாஜ தலைமையிடம் ஜி.கே.வாசன் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!