பாஜவுடன் கூட்டணி அமைக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு: பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு; நிர்வாகிகளை சமாதானப்படுத்த அன்புமணி முயற்சி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன. பாமகவிடம் கூட்டணி குறித்து பேசிய அதிமுக 7 மக்களவை மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுக்க சம்மதம் தெரிவித்தது. இதனை ராமதாசும் ஏற்று கொண்டதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் அன்புமணியோ பாஜவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் சென்னை திநகரில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் அன்புமணியை ஒன்றிய அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர்.

இதில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முடிவானது. இதற்கு ஒப்புக்கொண்ட அன்புமணி பாஜவுடன் கூட்டணி அமைக்கலாம் என ராமதாசை சமாதானம் செய்துள்ளார். ஆனால் ராமதாஸ் கட்சியின் எதிர்கால நலனை கருதியும், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜ கூட்டணியை விரும்பவில்லை என்பதாலும் மகனிடம் பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பாஜவுக்கு ஆதரவு அளிக்கலாம் என ராமதாஸ் கூறியும் மகனின் உறுதியான முடிவால் கட்சியின் முன்னணி நிர்வாகிகளைகூட சந்திக்காமல் தவிர்த்து வந்தார். இதற்கிடையே ராமதாசை மீறி அன்புமணி தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக தகவல் பரவியது.

இதையடுத்து தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. யாருடன் கூட்டணி என்பதில் கட்சி தலைமைக்குள் ஒருமித்த கருத்து எட்டப்படாததே கூட்டம் ரத்தானதற்கு காரணமாக பாமக வட்டாரத்தில் கூறப்பட்டன. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தைலாபுரத்தில் தொடர்ந்து தைலாபுரத்தில் இருந்தபடி கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஒருமித்த முடிவு எட்டியபின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தேர்தல் ஆணையர்கள் செயல்பாட்டில் சந்தேகம்: மாஜி முதல்வர் நாராயணசாமி ‘டவுட்’
காரைக்காலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: 3 ஆண்டுகளுக்கு முன் பாஜ- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது முதல் புதுச்சேரி கொலை நகரமாக மாறி விட்டது. கொலை, கொள்ளை, பலாத்காரம், குழந்தை கடத்தல் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் புதுச்சேரி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகி உள்ளது. சமீபத்தில் நடந்த சிறுமி கொலை சம்பவத்தின் பின்னணி போதை மருந்து தான். போதை மருந்து கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என மாநில காவல்துறை விசாரித்து கண்டுபிடிப்பது இயலாது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். கஞ்சா மட்டுமல்லாது பிரவுன் சுகர், ஹெராயின், அபின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டம் புதுச்சேரி மட்டுமின்றி காரைக்காலிலும் அதிகரித்துள்ளது.

புதிதாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லாது. தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சார்பின்றி நடுநிலையாக இருக்க வேண்டும். தற்போதைய தேர்தல் ஆணையரின் செயல்பாடு சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளது. பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரால் தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது. ஒன்றிய அரசு அந்த விதிகளை மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக தங்களுக்கு இணக்கமாக செயல்படும் ஒரு அமைச்சரை அதில் உறுப்பினராக சேர்த்து நாடாளுமன்றத்தில் தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி அதன்படி 2 தேர்தல் ஆணையர்களை நியமித்துள்ளனர். மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அந்த குழுவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

இந்த ஊரில் துளசிதான் முதன்மைப்பயிர்!

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு