பாஜ பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கு அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை கைது செய்ய தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜ பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய புகாரில் பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் உட்பட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்றும் காவல்துறை சார்பில் வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட வேண்டும், மனுதாரரால் அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள கூட முடியவில்லை என்று அமர் பிரசாத் ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால், இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து விசாரணையை நீதிபதி நாளை தள்ளிவைத்தார்.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி