நான் பாஜவுக்கு போறேனா? செருப்பாலே அடிப்பேன்… சீமான் மாதிரி கெட்ட வார்த்தையில்தான் பேசனும்… எம்பி திருநாவுக்கரசர் ஆவேசம்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்க முயலாத பாஜ அரசை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது எம்பி திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாஜ பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் ஆட்சியை விட பாஜ அதிக திட்டங்களை செயல்படுத்தியதாக கூறும் பிரதமர் மோடி அதற்கான ஆதாரங்களை காண்பிப்பதில்லை. கையாலாகாத ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்றார். அப்போது எம்.பியை கண்டா வர சொல்லுங்க என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ‘நான் இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறேன். நீங்களும் பார்த்து கொண்டுதான் இருக்கிறீர்கள்’ என பதில் அளித்தார். அப்போது அந்த நிருபர்,‘ மூன்று வருடமாக பார்க்கவில்லை இப்போது தான் பார்க்கிறேன்’ என்றார். உடனே ஆவேசமடைந்த திருநாவுக்கரசர், ‘நீ யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறாய்? நீ யாருக்கு அடிமையாக வேலை பார்க்கிறாய்? என்னை தொகுதி பக்கமே பார்க்கவில்லை என எப்படி கூறுவாய்? நீ காசுக்காக வேலை செய்கிறாய்?’ என கேட்டார்.

கேள்வி எழுப்பும் செய்தியாளர்களுக்கு இனி சீமான் பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும். கெட்ட வார்த்தைகள் தான் பேச வேண்டும். அவ்வாறு பேசினால் தான் நீ அடங்குவாய். தமிழ்நாடு முழுவதும் எம்பியின் படம் போடாமல் பிஜேபி, அண்ணா திமுககாரன் போஸ்டர் ஒட்டி உள்ளான். எல்லா எம்பி, எம்எல்ஏ அமெரிக்கா சென்று விட்டார்களா. எல்லா எம்பி இங்கே தான் இருக்கிறார்கள். பேப்பர்காரன் என்றால் பேப்பர்காரன் போலவும் டிவிக்காரன் என்றால் டிவிகாரன் போலவும் கேள்வி கேட்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு நாள் பேசாமல் தேர்தல் நேரத்தில் புகழ்ந்து பேசுவது அதிமுக வின் வாக்குகளை கவர்வதற்காக இருக்கலாம். வாக்குகளை கவரும் உள்நோக்கத்தோடு கூட அவர் பேசி இருக்கலாம். நான் பாஜவிற்கு செல்வதாக யாரோ எழுதியதை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. என்னை நீங்கள் நினைத்தாலும் பாஜ விற்கு அனுப்ப முடியாது. நான் பாஜவிற்கு செல்வேன் என கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன். நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன். யாரிடம் எப்படி கேட்க வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி கேள்வி கேட்பீர்களா,’ என்று கொந்தளித்துவிட்டார்.

* உண்டியல ஆட்டைய போடறதுதான் பிளான்: பொளந்து கட்டிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்ட பிறகு முதல் மேடையாக நெல்லையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: நாங்க வந்தா இந்து அறநிலையத்துறையே இருக்காதுனு அண்ணாமலை சொல்றார். உண்டியலை மொத்தமா ஆட்டைய போட நினைக்கிறார். பாஜல சேர்ந்த ஒருத்தர்ட்ட கேட்டேன். ஐபிஎஸ் படிச்சு ஏம்ப்பா அண்ணாமலை அரசியல் வந்தாருன்னு.. அதுக்கு, அது அவர் இஷ்டம்னு சொன்னார். அடப்பாவிங்களா, ஐபிஎஸ் படிக்கிறது மட்டும்தான் அவங்க வேலை. படிச்சி முடிச்சி தேர்வானதுக்கு அப்புறம் பயிற்சி எல்லாம் அரசு தான் செலவு செய்யும். 9 வருஷம் வேலை செஞ்சிட்டு மக்களுக்கான பணிய ஒழுங்கா செய்யாம அரசியலுக்கு வந்துட்டார். மனநோயாளிகளையும், கஞ்சா அடிப்பவர்களையும் பாஜவில் சேத்துட்டு செயல்படுறார் அண்ணாமலை. எல்லாருக்கும் கட்சி ஆரம்பிச்சவுடன் முதல்வராகணும்னு ஆசை. கையிலேயே காற்றில் தோசை சுடும் எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தில் ரூ.1000 கொடுத்தார். ஆனால், முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் ரூ.4,000 கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார் என்றார்.

* மோடி பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? வீட்டில் உள்ளவங்க மிச்சம் மீதியத்தான் சாப்பிடணும்; ஓ.பி.எஸ் மழுப்பல்
சென்னையில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அளித்த பேட்டி: கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து மோடி பங்கேற்ற விழாவில் உங்களுக்கு ஏன் அழைப்பு வரவில்லை, உங்களுக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லையா என்று கேட்கிறீர்கள். வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறோம். விருந்துக்கு அழைத்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதே இல்லை. வீட்டில் உள்ளவர்களை அழைக்க வேண்டும் என்று இல்லை. நாங்கள் இந்த கூட்டணியில் இல்லை என்று எப்போதும் அவர்கள் சொல்லவில்லை. நாங்களும் விலகி விட்டோம் என்று சொல்லவில்லை. வீட்டில் உள்ளவர்கள் மிச்சம் மீதி இருந்ததைதான் சாப்பிட வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களைதான் முதலில் உபசரிக்க வேண்டும். அதுதான் முதல் கடமை. பாஜ கூட்டணியில் நீங்கள் (ஓபிஎஸ்) இருக்கிறீர்கள் என்று பாஜ தலைவர்கள் இதுவரை சொல்லவில்லையே என்று கேட்கிறீர்கள். இதுபற்றி அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நாங்கள் கூட்டணியில் இல்லை என்பதையும் அவர்கள் சொல்லவில்லை. வீட்டில் இருப்பவர்கள் யார் யாரென்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்களும், பாஜ மேல்மட்ட தலைவர்களும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். இன்றைக்கும் பேசிக்கொண்டு இருக்கிறோம், இதுதான் உண்மை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* மோடியின் பெஸ்ட் ஜோக்: காங்கிரஸ் நக்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி.,எஸ்டி.,பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வௌியிட்ட அறிக்கை: பல்லடத்தில் நடந்த பாஜ கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வழக்கமாக பொய்களை அள்ளிவீசிச் சென்றுள்ளார். ஊழலுக்கு தான் எதிரானவர் போல் வேடமிடும் மோடி, ஜெயலலிதா சிறந்த முதலமைச்சர் என்று சான்றிதழ் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றவர் ஜெயலலிதா. அவர் இறந்த பிறகு சசிகாலாவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து சிறைக்கு அனுப்பியது. ரபேல் விமான பேர ஊழல் தொடங்கி தேர்தல் நன்கொடைப் பத்திரம் வரை பாஜவின் யோக்கியதை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. அதனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நற்சான்றிதழை மோடி தந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மோடி பேசியிருப்பது சிறந்த நகைச்சுவை. இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜவுடன் கூட்டணி சேரக்கூட ஆள் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜ எந்தவொரு கட்சிக்கும் போட்டியில்லை. நோட்டாவுக்கும் பாஜவுக்கும் இடையே தான் இங்கு போட்டி. முதலில் நோட்டாவை விட அதிக வாக்குகளை வாங்கிக் காட்டுங்கள். அதன்பிறகு இந்தியா கூட்டணியை விமர்சிக்கலாம்.

* தலைகீழ நின்னாலும் பாஜவால இங்கே காலூன்ற முடியாது: திருமாவளவன் காட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு எழுதிய “மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி” நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் நூலை வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமாவளவன் பேசுகையில், நமது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவதூறை பரப்பி வருகிறார்கள். அதை கடந்து செல்ல பழகி கொள்ள வேண்டும், நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. காங்கிரசுடன் முரண்பாடு இருக்கலாம், ஆனால் இன்றைய அரசியல் சூழலில் காங்கிரசுடன் இணைந்தால் தான் பாசிச பாஜவை வீழ்த்த முடியும். தமிழ்நாட்டில் என்னதான் தலைகீழாய் நடந்தாலும் பாஜவால் காலூன்ற முடியாது, எனவே அதிமுக வாக்கு வாங்கியை பெற வேண்டும் என்ற நோக்கில் மோடி எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்.

மோடி தமிழ்நாட்டை குறி வைத்து விட்டார், திராவிட வாக்குகளை சிதறடிக்கவே மோடி இப்படி பேசுகிறார். திமுக வலுவாக உள்ளது எனவே அதிமுக தோழர்களே எச்சரிக்கையாக இருங்கள். அதிமுகவை அழிக்க பாஜ முயன்றுவருகிறது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் வலுவாக இருந்த்தால் தான் சனாதன சக்திகள் இங்கே காலூன்ற முடியாமல் போனது. உடனே திருமாவளவன் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுகிறான் தேர்தலில் தொகுதி பங்கீட்டுக்காக அங்கேயும் சீட்டு போட்டு வைக்கிறான் என்று பேசுவார்கள், திருமாவளவனின் தொலைநோக்கு பார்வையை புரிந்து கொள்ள அவர்கள் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். நமது கருத்தியலில் தெளிவாக இருக்க வேண்டும், காலம் கனியும் போது மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்