பா.ஜ ஆட்சி அமைப்பதை தடுக்க நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசை காட்டப்பட்டதா?.. ஐக்கிய ஜனதா தளம் தலைவரின் குற்றச்சாட்டால் பரபரப்பு


புதுடெல்லி: பா.ஜ கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக இந்தியா கூட்டணி ஆசை காட்டியது என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் கே.சி. தியாகி குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. 18வது மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு வரவழைக்கும் முயற்சிகள் நடந்தன. குறிப்பாக பா.ஜ தலைமையில் மீண்டும் மோடி ஆட்சி அமைப்பதை தடுக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக இந்தியா கூட்டணி சார்பில் ஆசைவார்த்தை காட்டப்பட்டதாக ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறியிருப்பது இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கே.சி.தியாகி கூறியதாவது: காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் எங்கள் தலைவரை நடத்திய விதத்தால் நாங்கள் வேதனையடைந்தோம். வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்க நிதீஷ் குமார் தகுதியற்றவர் என்று நினைத்தவர்கள் இப்போது அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக கூறினார்கள். ஆனால் ஐக்கிய ஜனதாதளம் அத்தகைய அனைத்து சலுகைகளையும் நிராகரித்தது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருக்கும். இது பீகார் வளர்ச்சிக்கு உதவும். அனைத்து வளங்களும், நிலக்கரிச் சுரங்கங்களும் ஜார்கண்ட் மாநிலம் பிரிந்தபோது அங்கு சென்றுவிட்டன. ​​பீகார் வேலையில்லா திண்டாட்டம், வறுமை மற்றும் புலம்பெயர்ந்தோருடன் இருந்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாவிட்டால் பீகார் வளர்ச்சியடையாது.

மீண்டும் இந்தியா கூட்டணிக்கு திரும்புவார் என்ற வதந்தியை பிரதமர் மோடியை ஆதரித்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நிதீஷ் குமார் பேசிய பேச்சு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

Related posts

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு