பா.ஜ.க.வின் ஆணவப்போக்கால் அக்கட்சியை ராமர் தண்டித்துவிட்டார் : ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கடும் தாக்கு

டெல்லி : பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 241 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம் என்று இந்திரேஷ் குமார் சாடி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரும் பா.ஜ.க. மீது தாக்கி பேசியுள்ளார். உண்மையான மக்கள் சேவகனுக்கு ஆணவம் கூடாது என்று மோகன் பகவத் கூறிய நிலையில், மிகப்பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க. 241 இடங்களில் சுருங்க அவர்களது ஆணவமே காரணம் என இந்திரேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். 2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துகொண்ட பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 241 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார், “பா.ஜ.க.வின் ஆணவப்போக்கால் அக்கட்சியை ராமர் தண்டித்துவிட்டார். ராமர் மீது பக்தி கொண்டிருந்தவர்கள் படிப்படியாக ஆணவக்காரர்களாக ஆகிவிட்டனர்.ராமரின் பக்தர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். ராமர் மக்களையும் காப்பாற்றி, ராவணனுக்கும் உதவியவர் என்பதை மறக்க கூடாது. பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான நேரம் சரியானதல்ல என்று பெரும்பாலான சாதுக்கள், துறவிகள் கூறினார்கள். சாதுக்கள், துறவிகளின் கருத்தை மோடி புறந்தள்ளிவிட்டார்,”இவ்வாறு தெரிவித்தார். பாஜக பெயரை இந்திரேஷ் குமார் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தாலும் பாஜக தலைவர்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது