பாஜவுக்கு எதிராக களம் இறங்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் ‘இந்தியா’: பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு; 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

பெங்களூரு: வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போட்டியாக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. மேலும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் முயற்சி மேற்கொண்டார். இதை தொடர்ந்து கடந்த மாதம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, சிவசேனா உள்பட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடந்தன. பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்கள் சரத்பவார், உத்தவ்தாக்கரே, ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ.பிரைன் உள்பட 26 கட்சிகளை சேர்ந்த 43 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாவது நாள் கூட்டம்: இரண்டாவது நாள் கூட்டம் நேற்று பகல் 12.15 மணிக்கு தொடங்கியது. இதில் ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசின் ஜனநாயக விரோத போக்கு குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்ததுடன் பாஜவுக்கு எதிராக பலமான அணியை கட்டமைக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தனர். மேலும் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்ட வேண்டும், கூட்டணியை வழி நடத்த குழு அமைக்க வேண்டும், குறைந்த பட்ச செயல்திட்டம் வகுக்க வேண்டும், நாடு முழுவதும் சில மாநிலங்களில் மாநாடு, பேரணி நடத்த வேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்தனர்.

புதிய கூட்டணியின் பெயர் இந்தியா: அதை தொடர்ந்து 26 கட்சிகள் இணைந்துள்ள கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது என்று நிதிஷ்குமார், அகிலேஷ்யாதவ், லாலுபிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், தொல். திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் ஒவ்வொரு பெயர்களை தெரிவித்தனர். இறுதியாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியான(என்டிஏ) கூட்டணிக்கு எதிராக நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்தியா (இந்தியன் நேஷனல் டெவலப்மென்ட்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்) என்ற பெயரில் கூட்டணி பெயர் சூட்டலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. அதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக கூட்டணி பெயருக்கு ஒப்புதல் வழங்கினர்.

மல்லிகார்ஜுன கார்கே பேட்டி: கூட்டம் முடிந்த பின் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பது மற்றும் மக்கள் நலன் காப்பது தான் இந்த கூட்டத்தின் முக்கியமான நோக்கம். பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒருமித்த குரல் எழுப்புவோம். எதிர்க்கட்சிகள் ஒரு பெயரில் இணைகிறோம். இனிமேல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை. புதிய கூட்டணியின் பெயர் இந்தியா (இந்தியன் நேஷனல் டெவலப்மெண்ட்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்) என்று பெயர் சூட்ட கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் இந்தியா கூட்டணியை வழி நடத்தி செல்ல 11 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். பிரசார மேலாண்மைக்கு பொதுவான ஒரு செயலகம் டெல்லியில் அமைக்கப்படும். அனைத்து கட்சிகளும் முக்கியமான பரிந்துரைகளை வழங்க வாய்ப்பு வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீரழிக்கிறது. தன்னிச்சை அதிகாரம் பெற்ற சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய தன்னிச்சை அதிகாரம் பெற்ற துறைகளை எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த தவறான வழிகளில் பயன்படுத்துகிறது ஒன்றிய பாஜ அரசு. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டும். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகள் கலந்து கொண்டன. பெங்களூருவில் நடந்த இந்த 2வது கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்துகொண்டன. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்ற நிலையில், பாஜ டெல்லியில் நடத்தும் கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொள்வதாக கூறுகிறது. அவையெல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தானா என்று தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததை கண்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார். பயப்படவில்லை என்றால் பாஜவும் இதே நாளில் கூட்டம் கூட்ட வேண்டிய அவசியமில்லை. எனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக இந்தளவிற்கு மோசமான அடக்குமுறையை கையாண்ட ஆட்சியாளரை பார்த்ததில்லை. மக்கள் விரோத பாஜவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி காண்போம். எங்கள் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றார்.

* சோனியா, ராகுல் விமானம் அவசரமாக தரையிறக்கம்
ெபங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் முடிந்து டெல்லி புறப்பட்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவர்கள் பயணித்த விமானம் மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேசத்தின் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

* மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்: மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால் தான் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்திருக்கிறோம். நாம் கூடியிருப்பது நமக்காக அல்ல; நாட்டை வெறுப்புணர்விலிருந்து காப்பதற்காக என்றார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: எங்களது குடும்பங்களை பாதுகாக்கத்தான் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று பாஜ விமர்சிக்கிறது. ஆம்.. நான் எனது குடும்பத்தை பாதுகாக்கத்தான் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். எனது நாடு தான் எனது குடும்பம். நாடு தான் நம் குடும்பம். நம் குடும்பத்தை பாதுகாக்க நாம் இணைந்து போரிட வேண்டும்.

* எங்களுக்கு பிடித்தவர் ராகுல்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,’ ராகுல் காந்தி ‘‘எங்களுக்கு பிடித்தவர். எங்கள் கூட்டணிக்கு இந்தியா” என்று நாங்கள் இணைந்து பெயரிட்டுள்ளோம்’ என்றார். இந்த கூட்டத்தில் ராகுலும், மம்தாவும் மிகவும் நட்புடன் காணப்பட்டனர். மம்தாவுக்கு ராகுல் உணவு பறிமாறியதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

* பா.ஜ.,விடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: இந்த சந்திப்பு முக்கியமானது, ஏனெனில் இந்தியா என்றால் என்ன என்று எங்களுக்குத் தெரியும். நாடு மிகப்பெரிய பல பரிமாண தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சிறந்த மாற்றத்தை உருவாக்க நாட்டை காப்பாற்ற வேண்டும்.
கேஎம்டிகே பொதுச்செயலாளர் ஈஆர் ஈஸ்வரன்: நாம் தேசத்தைப் பாதுகாக்க வேண்டும், சக குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிரித்து ஆட்சி செய்தனர். இன்று, பா.ஜ., நாட்டை பிரித்து சீரழித்து வருகிறது. பா.ஜ.,விடம் இருந்து நாட்டை காப்பாற்ற, இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

* எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது பா.ஜ
எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது; நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியலமைப்பும், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய அரசியல் சாசன அதிகாரிகள் பயன்படுத்தப்படுகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் பிளாக்மெயில் செய்யப்படுகின்றனர் அல்லது மாநில அரசுகளை கவிழ்க்க பாஜவுக்குச் செல்ல லஞ்சம் கொடுக்கப்படுகிறார்கள். எனவே தனிப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றாக இருந்து பா.ஜவை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* சிறுபான்மையினர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்ப்போம்
26 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்டு தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாக்க வேண்டும். நமது குடியரசின் தன்மை பாஜவால் திட்டமிட்ட முறையில் கடுமையாகத் தாக்கப்பட்டு வருகிறது. நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. மணிப்பூர் நிலைமை கவலை அளிக்கிறது.

பிரதமர் மோடியின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சி நடக்கிறது. பாஜ அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் செயல்பாடு அனைத்து அரசியலமைப்பு விதிமுறைகளையும் மீறுகிறது. அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக பாஜ அரசு விசாரணை அமைப்புகளை வெட்கக்கேடாக தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் நியாயமான தேவைகள், உரிமைகள் ஆகியவை ஒன்றிய அரசால் தீவிரமாக மறுக்கப்பட்டு வருகின்றன.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான எங்கள் உறுதியை நாங்கள் வலுப்படுத்துகிறோம். பணமதிப்பு நீக்கம் சிறுகுறு தொழில்நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கு சொல்லொணாத் துயரத்தைக் கொண்டுவந்தது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்து விட்டது. சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தோற்கடிக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க, சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான விசாரணையைக் கோருகிறோம். இதற்கு முதல்கட்டமாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும். நாட்டிற்கு மாற்று அரசியல், சமூக மற்றும் பொருளாதார திட்டங்களை முன்வைக்க நாங்கள் உறுதியளிக்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* ‘இந்தியா’ பெயர் வந்தது எப்படி?
பா.ஜ கூட்டணிக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிடப்பட்டது. முதலில் ‘இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி’ என்று வைக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் ‘ஜனநாயக’ என்ற வார்த்தை ‘வளர்ச்சி’ என்று மாற்றப்பட்டது. இதில் ‘தேசியம்’ என்ற வார்த்தையை கைவிட வேண்டுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் தேசியம் இடம் பெறவும் முடிவு செய்யப்பட்டது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘இந்தியா’ பெயரை பரிந்துரைத்ததாகவும், ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில்,’ இந்தியா என்று கூட்டணிக்கு பெயர் வைத்தவர் ராகுல்காந்தி’ என்றார்.

* இந்தியாவை எதிர்க்க பாஜவுக்கு தைரியம் உள்ளதா? மம்தா சவால்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, எதிர்க்கட்சிகள் கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்தது. நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வேண்டும். அதற்காக இனம், மதம், மொழி கடந்து நாட்டின் நலனுக்காக இங்கே ஒன்றாக இணைந்துள்ளோம். விவசாயிகள், ஏழை மக்களுக்கு தோள் கொடுத்து இந்தியாவை பேரழிவில் இருந்து காப்போம். எங்கள் இந்தியாவை எதிர்க்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தைரியம் இருக்கிறதா? மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை பாஜ அச்சுறுத்துகிறது. பாஜவின் ஒரே வேலை, அரசாங்கங்களை வாங்குவதும் விற்பதும் தான். அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை பேரழிவிலிருந்து காப்போம் என்றார்.

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!