பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக கூட்டணி ஆட்சி மீது ஜூன் 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு : 6 கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி?

டெல்லி : பாஜக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு முக்கிய அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலில் இம்முறை பாஜவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென்றால், 16 எம்பிக்களை வைத்துள்ள தெலுங்கு தேசம் மற்றும் 12 எம்பிக்களை வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு பாஜவுக்கு அவசியமாகி உள்ளது. இதன் காரணமாக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாகி உள்ளனர். ஆகவே அவர்கள் பாஜ அரசுக்கு ஆதரவளிக்க இப்போதே பல்வேறு நிபந்தனைகள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர ரயில்வே உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென இரு கட்சிகள் கேட்டுள்ளன. ஏற்கனவே 3 ஒன்றிய அமைச்சர் பதவி தர நிதிஷ் குமாருக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 போதாது 4 அமைச்சர் பதவி, ஒரு இணை அமைச்சர் பதவி கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உள்துறை, பாதுகாப்புத் துறை உட்பட முக்கிய துறைகளை கேட்டு தெலுங்குதேசம் கட்சியும் நிபந்தனை வைத்துள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் முன்பே பாஜ மேலிடம் கதி கலங்கி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் இல்லத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர். குறிப்பிட்ட இலக்கான 400-ஐ எட்ட முடியாதது ஏன்? சரிவுக்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில் வெற்றி எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், ஷிண்டே சிவசேனா, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜனசேனா உட்பட 6 கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே நேரத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக கூட்டணி அரசின் மீது நாடாளுமன்றத்தில் ஜூன் 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்