பாஜக பிரமுகர் கொடூரக்ெகாலை தாய், மகள் உட்பட 7 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிங்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் புட்டா ராமு(36). பாஜ பிரமுகரான இவர் ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் நடத்தி வந்தார். நடைபெற உள்ள எம்பி தேர்தலில் போட்டியிட பாஜ கட்சி தலைமையிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த 7ம் தேதி ஐதராபாத் நிஜாம்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுலபாலம் பகுதியை சேர்ந்த பெண் ஹிமாம்பி (40) மற்றும் அவரது மகள் நசீமா(19) ஆகியோர், ரவுடி கும்பலுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ஹிமாம்பி, நசீமா, மணிகண்டா, வினோத், முகமதுகைசர், பண்டாசிவா, கபாலா நிகில் ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம்:

கணவரை பிரிந்த ஹிமாம்பி தனது மகள் நசீமாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யூசுஃப்குடாவில் உள்ள ஒரு போலீஸ்காரரின் வீட்டில் வாடகைக்கு குடியேறினார். அப்போது ஹிமாம்பிக்கும்
போலீஸ்காரருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து ஹிமாம்பி வாடகைக்கு குடியிருந்த வீட்டை அவரது பெயருக்கே போலீஸ்காரர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டாராம். அதன்பிறகு ஹிமாம்பி, போலீஸ்காரரின் தொடர்பை துண்டித்துக்கொண்டாராம்.

பின்னர் அந்த வீட்டில் ஹிமாம்பியும், அவரது மகளும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாஜ பிரமுகர் ராமுவுடன் ஹிமாம்பிக்கு பழக்கம் ஏற்பட்டது. ராமு ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, சூதாட்டமும் நடத்தியுள்ளார். இதனால் அவரிடம் அதிகளவு பணம் இருந்துள்ளது. இதையறிந்த ஹிமாம்பி அவரிடம் இருந்து பணத்தை சிறிது சிறிதாக வாங்கியுள்ளார். இந்நிலையில் ஹிமாம்பியின் மகள் நசீமாவை அடைய ராமு திட்டமிட்டுள்ளார். இதற்கு ஹிமாம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத ராமு, நசீமாவை அடைய பலமுறை முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹிமாம்பி, ராமுவை கொல்ல முடிவு செய்தார்.

அப்போது ராமுவின் சூதாட்ட நண்பர்களான மணிகண்டா(30), வினோத்(20) ஆகியோர் ஹிமாம்பிக்கு அறிமுகமாகினர். சூதாட்டத்தில் கிடைக்கும் பணத்தில் ராமு சரியாக பங்கு தரவில்லையாம். இதனை தட்டிக்கேட்ட மணிகண்டாவை ராமு கார் ஏற்றி கொல்ல முயன்றுள்ளார். இதில் மணிகண்டா தப்பிவிட்டார். இதனால் மணிகண்டா, ராமுவை கொல்ல முயன்றுள்ளார். இதற்கிடையில் ஹிமாம்பி வீட்டிற்கு ராமு, மணிகண்டா, வினோத் ஆகியோர் அடிக்கடி சென்று வந்த நிலையில் நசீமாவுடன் வினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் ராமுவை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 7ம்தேதி நசீமா, ராமுவுக்கு போன் செய்து, ‘உங்களை சந்திக்க உள்ளேன்’ என்று கூறினார். அதன்படி நசீமாவை ராமு சந்திக்க சென்றார்.

அப்போது அங்கிருந்த ஹிமாம்பி, மணிகண்டா, வினோத் மற்றும் ஜிலானி உள்பட 11 பேர் ராமுவை கத்தியால் வெட்டியுள்ளனர். 25க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தியதில் ராமு ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அனைவரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார், ராமுவின் செல்போனில் இருந்த அழைப்புகளை ஆய்வு ெசய்தபோது, நசீமா கடைசியாக பேசியது தெரியவந்தது. அதனை கொண்டு விசாரித்தபோது அவர்கள் அனைவரும் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு