புதுச்சேரி அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி: அமைச்சர் பதவி கேட்டு அடம்

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் பாஜ வேட்பாளராக களம் இறங்கிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் தோல்வி அடைந்தார். இது என்ஆர் காங்கிரஸ், பாஜ நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், அசோக்பாபு, பாஜ ஆதரவு எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன் உள்ளிட்டோர் காலாப்பட்டு அருகே தனியார் ஓட்டலில் நேற்று ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பிறகு பாஜ மாநில தலைவர் செல்வகணபதிக்கு அழைப்பு விடுத்து ஓட்டலுக்கு வரவழைத்த எம்எல்ஏக்கள், தேர்தல் முடிவால் கட்சியின் இமேஜ் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்களுக்கும் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும், அதுமட்டுமின்றி பாஜவை ஆதரிக்கும் சுயேட்சை எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதை வருகிற சட்டசபை கூட்டத் தொடருக்கு முன்பாகவே செய்ய மறுத்தால் அரசுக்கு எதிராக சபையில் கடுமையாக குரல் எழுப்புவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாஜ எம்எல்ஏக்களின் திடீர் போர்க்கொடி குறித்து டெல்லி சென்று தேசிய தலைமையிடம் தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் என்ஆர் காங்கிரஸ் தரப்பு கலக்கத்தில் உள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசை சேர்ந்த சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்குபின் அமைச்சராக பதவியேற்ற திருமுருகனுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படாமல் இருப்பது, நாடாளுமன்ற தேர்தலில் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தது, அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் 6 டன் சந்தனகட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் தனி குழுவாக ஆலோசித்து அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை