கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

* அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி
* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் குஸ்தி

புதுச்சேரி: கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல் நடப்பதாக புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார் அளித்து உள்ளனர். அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி உள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளரான நமச்சிவாயம் தோல்வியடைந்தார். இந்தியா கூட்டணி சார்பில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் வெற்றிபெற்று மீண்டும் எம்பி ஆனார். என்ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி அரசு புதுச்சேரியில் நடைபெறும் நிலையில், ஆளுங்கட்சி தோல்வியை தழுவியதால் தேஜ கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தோல்வியின் விரக்தியால் பாஜ எம்எல்ஏக்கள் 5 பேர், வாக்கு எண்ணிக்கை முடிந்த ஒரு வாரத்தில் தனியாக ரகசிய கூட்டம் நடத்தி பின்னர் மாநில தலைவர் செல்வகணபதியை அழைத்து ஆட்சி, கட்சி மீதான தங்களது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜ மாநிலத் தலைவர் பதவி விலக வேண்டுமென மாஜி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திலும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. இதனால் தேர்தல் தோல்விக்குபின் தேஜ கூட்டணிக்குள் மோதல் போக்கு வெட்ட வெளிச்சமானது. இந்நிலையில் புதுச்சேரி பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையில் எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், நியமன எம்எல்ஏக்கள் வெங்கடேசன், அசோக் பாபு உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணனை நேற்று ராஜ்நிவாசில் திடீரென சந்தித்து பேசினர்.

எம்எல்ஏக்களுக்கு தெரியாமல் ரெஸ்டோ பார்கள் திறப்பு, அரசு அதிகாரிகள் ஊழலில் திளைப்பு, வாரியத் தலைவர் பதவி நிரப்பாமல் இருப்பது, லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாதது, எம்எல்ஏக்கள் பரிந்துரையின்றி கோயில்களில் கமிட்டி அமைத்தது, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் அமைக்காதது, ரேஷன் கடைகளை திறக்காதது, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக் காட்டி மனு அளித்ததோடு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதையடுத்து சம்மந்தப்பட்ட துறை செயலர்களை அழைத்து, எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை குறித்து ஆராயுமாறு உத்தரவிட்ட கவர்னர், இதுதொடர்பாக முதல்வரிடம் பேசுவதாக தெரிவித்தார். மேலும் முதல்வரின் உத்தரவை அரசு உயர் அதிகாரிகள் மதிப்பதில்லை, அமைச்சர்களின் செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாததை தேர்தல் முடிவுகள் காட்டுவதால் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் மீது முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, என்னால் அரசின் கோப்புகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும் என கவர்னர் கூறிவிட்டார். இதையடுத்து அரை மணி நேர சந்திப்புக்குபின் 7 எம்எல்ஏக்களும் ராஜ்நிவாஸில் இருந்து வெளியேறினர். முதல்வரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரை சந்திந்து புகார் மனு அளித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

10 புரோக்கர்கள் மூலம் ஆட்சி செய்கிறார் ரங்கசாமி: சுயேச்சை எம்எல்ஏ பகீர்
புதுச்சேரி கவர்னருடனான சந்திப்பு குறித்து பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் கூறியதாவது: மொத்தம் 7 எம்எல்ஏக்கள் சேர்ந்து கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினோம். தொகுதியில் நிலவரங்கள் சரியில்லை. எம்எல்ஏக்கள் மீட்டிங் எதையும் போடுவது கிடையாது. அவர் (முதல்வர்) இஷ்டத்துக்கு வர வேண்டியது, அவர் இஷ்டத்துக்கு போக வேண்டியது… திர்க்கட்சி எம்எல்ஏக்களையும் எல்லாம் வைத்துக் கொண்டு அரவணைத்து அவர்களுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விடுகிறார். இந்த 3 வருடத்துல ஒரு குறைகேட்பு கூட்டம்கூட போடல. எல்லா துறை தொடர்பான மீட்டிங் போட்டால்தானே நாங்கள் எங்களது குறையை சொல்வோம்… ஊழல் அங்காங்கே புரையோடி இருகிறது. குறிப்பா குப்பை வாராமலேயே பாக்கெட்ல வாங்கி போட்டுட்டு போறான் அக்கா சுந்தரம் (முதல்வருடன் இருப்பவர்) மாதம் 10 லட்சம் ரூபாய். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஒவ்வொரு விஷயமும், எந்த விஷயமும் காசு இல்லாம, லஞ்சம் இல்லாம நடக்க மாட்டேங்குது. ஒன்ன சஃப்லிங் பண்ணி மந்திரியை மாற்றி கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க… என்று கேட்டோம். முதல்வர் செய்யல. பாஜ எம்எல்ஏக்களை மாற்றுவது என்னுடைய வேலை இல்லை. வந்தால் நான் கையெழுத்து போடுவேன்.. நான் போய் சிஎம் கிட்ட எப்படி இதுபற்றி பேச முடியும் என்று கவர்னர் சொன்னார். நாங்கள் திங்கட்கிழமை டெல்லி போகிறோம். கட்சித் தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்கிறோம். அமித்ஷாவையும் பார்க்கணும். முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அட்மினிஸ்டிரேசன் சரியில்லை. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் நடக்கிறது. லஞ்சம் லாவண்யம் சாதாரணமாகி விட்டது. முதல்வர் 10 பேரை புரோக்கராக வைத்துக்கிட்டு காசு வாங்கிட்டு ஆட்சி நடத்துகிறார். இந்த பக்கம் நமச்சிவாயம் 10 பேரை வைத்து காசு வாங்கி ஆட்சி நடத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஊழல் பணத்தில் பிரமாண்ட திருமண மண்டபம்: மாஜி முதல்வர் குற்றச்சாட்டு
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும். புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பிறகு ஆட்சியாளர்கள் மாறவில்லை. தொடர்ந்து அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் சந்தன கட்டைகள் கடத்தல் விவகாரத்தில் நிறைய மர்மங்கள் உள்ளன. வனத்துறை அமைச்சருக்கு தெரியாமல் அந்த ஆலை இயங்கியிருக்க முடியாது. எனவே இதற்கு வனத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி அரசு முழு அறிக்கை வெளியிட வேண்டும். தனது மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தன கட்டைகள் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளதால், வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அதிகாரம் இல்லாமல் இந்த ஆட்சி செயல்படுகிறது. முதல்வர் அலுவலகத்தில் புரோக்கர்கள் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறவில்லை. புரோக்கர்கள்தான் இந்த ஆட்சியை நடத்துகின்றனர். புரோக்கர்கள் ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஊழல் பணத்தில் 10 கோடி மதிப்பில் ரங்கசாமி திருமண மண்டபம் கட்டி கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியுற்ற பாஜ வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தற்போது இலங்கை சென்று வந்துள்ளார். புதுச்சேரி வரலாற்று சரித்திரத்தில் எந்த அமைச்சரும், தற்போது உள்ள உள்துறை அமைச்சர் போல் அதிகமாக வெளிநாடு சென்றதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்