பாஜ உறுப்பினர்கள் 4 மடங்கு அதிகரிப்பு: எண்ணிக்கையை வெளியிட மாட்டோம் அண்ணாமலை பேட்டி

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜ 44வது ஆண்டு துவக்க விழா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அண்ணாமலை கட்சி கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழ் நாட்காட்டியை வெளியிட்டு, இருசக்கர வாகனங்களில் மோடியின் உருவ படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டினார். பின்னர் பிரதமர் மோடி ஆற்றிய உரையை காணொலி வாயிலாக பாஜவினர் பார்த்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பாஜ கட்சியின் 44வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது சாதாரணமான ஒன்று இல்லை. இது ஒரு வரலாறு. திரும்பி பார்க்கும்போது தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களுக்கு பிரமிப்பாக இருக்கிறது. பாஜவில் 365 நாட்களுமே உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகிறது. பாஜவில் உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

இடையிடையே சிறப்பு உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி பாஜ சென்று கொண்டிருக்கிறது. 43 ஆண்டுகளில் எந்த கட்சியும் அடையாத வளர்ச்சியை பாஜ அடைந்துள்ளது. டெல்டா பகுதியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான இடமாகவும், உணவு கொடுக்கக்கூடிய பகுதியாகவும் உள்ளது. தற்போது ஒன்றிய அரசை பொறுத்தவரை நிலக்கரிக்காக சுரங்கம் அமைப்பதற்காக ஒரு டெண்டரை அறிவித்திருக்கிறார்கள். விவசாய நண்பர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த திட்டமும் ஒன்றிய அரசின் மூலம் தமிழகத்திற்கு வராது. பாஜவினுடைய விதிமுறைப்படி எங்களது உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட மாட்டோம். ஆனால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடை செய்த பிறகு உறுப்பினர் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு