பா.ஜவின் 5வது பட்டியலில் 37 எம்பிக்களுக்கு சீட் மறுப்பு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜ வெளியிட்ட 5வது பட்டியலில் 37 சிட்டிங் எம்பிக்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜ இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் 111 பேர் அடங்கிய 5வது பட்டியலை வெளியிட்டது. இதில் சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாயா, மேற்கு வங்க மாநிலம் தாம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தொழிலதிபர் நவீன் ஜிண்டால் அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதே சமயம் பாஜ பிரபலங்களான மேனகா காந்தி (சுல்தான்பூர்) நித்யானந்த் ராய் (உஜியார்பூர்), கிரிராஜ் சிங் (பெகுசாரை), ரவி சங்கர் பிரசாத் (பாட்னா சாஹிப்), நடிகை கங்கனா ரணாவத் (மண்டி), சீதா சோரன் (தும்கா), ஜெகதிஷ் ஷெட்டர் (பெல்காம்), கே.சுதாகரன் (சிக்கபல்லாபூர்), தர்மேந்திர பிரதான் (சம்பல்பூர்), சாம்பிட் பத்ரா (புரி), ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் (மீரட்) உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதேநேரம் ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி குமார் சவுபே, வி.கே.சிங் மற்றும் எம்பி வருண் காந்தி உள்ளிட்ட 37 எம்பிக்களுக்கு மீண்டும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. பா.ஜ பட்டியலில் டெம்போ இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் பல்லவி டெம்போ (49) என்பவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் தெற்கு கோவாவில் போட்டியிடுகிறார். பல்லவி டெம்போவின் கணவர் ஸ்ரீனிவாஸ் டெம்போ, கோவா வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் (ஜிசிசிஐ) தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லவி டெம்போவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பிரான்சிஸ்கோ சர்தினா போட்டியிடுகிறார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு