பாஜவுடன் கள்ளக்கூட்டணியா? தூத்துக்குடி பிரசாரத்தில் எடப்பாடி விளக்கம்

தூத்துக்குடி: பாஜவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளதா என்று தூத்துக்குடி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடியில் பாளை ரோடு, விவிடி சிக்னல் சந்திப்பு அருகேயுள்ள மைதானத்தில் அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் சிவசாமி வேலுமணியை அறிமுகம் செய்துவைத்துப் பேசியதாவது: அதிமுக யாருடனும் மறைமுக கூட்டணி வைக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இருந்தால் பாஜவோடு கூட்டணி வைத்து ஒன்றிய அமைச்சர்களாக அதிமுகவினர் இருந்திருப்பார்கள். நாங்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே பாஜவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டோம்.

நாங்கள் கொள்கை கூட்டணி அமைத்துள்ளோம். கடந்த 2011ம் ஆண்டு தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது, அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்க்கட்சியாகவும் வந்தது. அந்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. எனவே, நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். கடந்த மழை வெள்ளத்தின்போது மக்களோடு அதிமுக நின்று உதவிகளை செய்தது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 200 பேரை தங்க வைத்து பாதுகாத்தவர். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கொள்கை கூட்டணி, வெற்றிக் கூட்டணி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் குரல் மக்களவையில் ஒலித்திட அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்’’ என்றார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்