கவனச் சிதறலுக்கு இடம் தரக் கூடாது; பாஜ செய்யும் திசை திருப்பும் தந்திரத்தை திமுகவினர் முறியடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கவனச் சிதறலுக்கு இடம் தராமல், பாஜவினர் செய்யும் திசை திருப்பும் தந்திரத்தை உணர்ந்து திமுகவினர் அதை முறியடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒரு முக்கியமான கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘பாஜவின் ஊழல்களைப் பற்றித் தான் நாம் அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத் தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சி பேசித் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ள கருத்து மிக மிகச் சரியானது. அதையே திமுக முன்னணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதில் பாஜவினர் வல்லவர்கள். நாட்டில் நடைபெறும், பற்றி எரியும் எந்தப் பிரச்சினைக்கும் வாய்திறக்காத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ‘சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்’ என்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள். சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். பாஜ ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளித்துவிடக் கூடாது.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்திய நாட்டின் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவில்லை. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, சர்வாதிகார ஒற்றை ஆட்சி என்ற ஆபத்தான பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்கிறார்கள். பாஜ என்ற கட்சியின் கஜானா மட்டும் அதிகமாக நிரம்பியது. ஊழல்களும், முறைகேடுகளும் மட்டுமே நடந்தன. ரபேல் ஊழலும், அதானி முறைகேடுகளும் உலக சமுதாயத்தின் முன்னால் இந்தியாவைத் தலைகவிழ வைத்துவிட்டன.

பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், சுங்கச் சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புர அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய ஏழு திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த ஏழு திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளன, விதிமீறல்கள் நடந்துள்ளன, நிதியைக் கையாள்வதில் மோசடிகள் அரங்கேறியுள்ளன என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 7.50 லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது பாஜ.

4 மாதகாலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதனை அணைக்க முதுகெலும்பு இல்லாத அரசாக ஒன்றிய பாஜ அரசு இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு கூட துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனை எல்லாம் பேசவிடாமல் திசை திருப்ப பாஜ முயற்சிக்கிறது. இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்கள். நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு