திருவனந்தபுரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புகையிலையை கடத்திய பாஜ கவுன்சிலர் கைது

செங்கோட்டை: ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலையை கடத்திய பாஜ கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை, சுண்ணாம்பு விளை தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செண்பகராஜன் (31). செங்கோட்டை நகராட்சி 24வது வார்டு பாஜ கவுன்சிலர். லோடுவேன் தொழில் நடத்தி வருகிறார். இவர், சாத்தான்குளத்தை சேர்ந்த அஜய் ரவி (25), அதே ஊரைச் சேர்ந்த கிருபாகரன் (35) ஆகியோருடன் தனது லோடு வேனில் திருவனந்தபுரத்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 72 புகையிலை மூடைகளை நேற்று காலை ஏற்றிக்கொண்டு செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

புளியரை செக்போஸ்டில் வந்த போது தென்காசி எஸ்பி சிறப்பு படை எஸ்ஐ வேல்முருகன் தலைமையில் சோதனை நடத்திய போலீசார், 72 மூட்டை புகையிலையுடன் வேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதலான புகையிலையின் மதிப்பு ரூ.10.17 லட்சம் ஆகும். கைதான பா.ஜ. கவுன்சிலர் செண்பகராஜனுக்கு சொந்தமான வாகனம், விருதுநகரில் இதே போல் புகையிலை கடத்தியதாக சமீபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்திய சம்பவத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பா.ஜ. வக்கீல் மணிகண்டன் சிக்கினார். அதன் சுவடு மறைவதற்குள் செங்கோட்டை நகராட்சி பா.ஜ. கவுன்சிலரும் புகையிலை கடத்தலில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்