பாஜ, பாமக குறித்து பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் காட்டம்

சிவகங்கை: ‘பாஜ, பாமக பற்றி பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்லை’ என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் நேற்று நடந்த பாஜ உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை அரசை மிரட்டவே நடத்துகிறார் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

அதன்படி, தற்போது ஆட்சியில் பங்கு என கோரிக்கை எழுப்புகிறார். திருமாவளவனும், அவரது கூட்டணி கட்சியினரும் தான் ஆட்சி அதிகாரம், அதில் பங்கு குறித்து பேசி கொள்ள வேண்டும். பாஜவையும், பாமகவையும் பற்றி பேச திருமாவளவனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. எங்களது கூட்டணி கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்துள்ளோம். பாஜ, பாமகவை மதம், ஜாதிக்கட்சி எனக்கூறும் திருமாவளவன், என்ன கட்சி நடத்தி கொண்டு வருகிறார்?

ஜாதி அமைப்பு, மத அமைப்பு என சொல்வதற்கு முன்பு, எந்த அடிப்படையில் அவர் கட்சி நடத்துகிறார்? அவர் என்ன ஒட்டுமொத்த தலித் சமுதாயத்தினருக்கான கட்சி நடத்துகிறாரா? தமிழக மக்களுக்கான கட்சி நடத்துகிறாரா? இல்லையே. அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதி தலைவராக இருந்து கொண்டுள்ளார். அவர் ஒரு ஜாதி தலைவராக இருந்து கொண்டு, மற்றவர்களை சொல்வது கேலிக்குரியதாக உள்ளது. ஒரு விஷயம் சொல்வதற்கு முன்னால் சுய பரிசோதனை செய்து கொண்டு சொன்னால் சரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்