பாஜக சார்பில் 4 நாட்களுக்கு 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் : மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

சென்னை : சென்னை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், “அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஶ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, இன்றைய தினம் காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டோம்.

மேலும், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். பாஜக சகோதர சகோதரிகள் இந்த இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,”உலக அளவில் மிகப் பழமையான பாசன வாய்க்கால் என்ற பெருமைக்குரிய, சுமார் 90 கிமீ நீளமுள்ள ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, தை மாதம் ஐந்தாம் நாளான இன்று காலிங்கராயர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பவானி, நொய்யல் நதிகளை இணைத்து, நதி நீர் இணைப்பைச் சாத்தியமாக்கிய மன்னர் காலிங்கராயர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வாய்க்கால், சுமார் 740 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு சுற்றுவட்டாரப் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பெரும் வரமாக இருக்கிறது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது.

தனது சொந்தச் செலவில் வாய்க்கால் வெட்டி மக்களுக்கு அர்ப்பணித்த மன்னர் காலிங்கராயர் அவர்கள் புகழைப் போற்றுவோம். தமிழகத்தின் பண்பாடு மற்றும் வரலாற்றுச் சுவடாக விளங்கும் காலிங்கராயர் வாய்க்காலைப் பழுதின்றிக் காப்போம்,”எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது