யாராவது வருவார்களா என்று காத்திருந்த நிலையில் மோடி கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள்: பாஜ கூட்டணியில் இணைந்தது தமாகா; ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் மட்டுமே பங்கேற்பு

சென்னை: பிரதமர் மோடி இன்று கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்க பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மறுத்து விட்டன. பிரதமர் மோடி, இன்று திருப்பூர் வருகிறார். அங்கு, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து வருவதோடு, அதிமுக முன்னணி தலைவர்களையும் பாஜவில் சேர வைக்க வேண்டும் என்று அண்ணாமலை தீவிரம் காட்டினார். ஆனால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் யாரும் வர மறுத்து விட்டனர். இதனால் கூட்டணியை இறுதி செய்து, அந்த கூட்டத்தில் அவர்களை பங்கேற்க வைத்து, அதிமுகவுக்கு பாடம் புகட்ட அண்ணாமலை தீவிரம் காட்டினார்.

ஆனால் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜ கூட்டணியில் சேர மறுத்து விட்டன. இதனால் உதிரி கட்சிகளையாவது கூட்டணியில் சேர்த்து, அந்த கட்சிகளின் தலைவர்களை மோடியின் கூட்டத்தில் பங்கேற்க வைக்க அண்ணாமலை முடிவு செய்தார். இதற்காக தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், பாஜ தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார். அப்போது, இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி முடிவானது.

தற்போது, பாஜ கூட்டணிக்கு முக்கிய கட்சிகள் எதுவும் வரவில்லை. வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனால் பாஜவில் பல தொகுதிகளில் போட்டியிட ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வாசன் கேட்ட தொகுதிகளை தருவதற்கு பாஜ முன் வந்தது. அதன்படி, 3 நாடாளுமன்ற தொகுதிகளை பாஜ ஒதுக்கியது. ராஜ்யசபா சீட் தொடர்பாக மேலிடத்தில் கேட்டு சொல்வதாக உறுதி அளித்துள்ளனர். இதற்கிடையே மோடியின் கூட்டத்தில் வாசன் மற்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர்தான் கலந்து கொள்கின்றனர். இது அண்ணாமலைக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கூட்டணி குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவினுடைய தமிழக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனனுடன் சுமார் 30 நிமிடம் தமிழக அரசியல் நிலவரம், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசினோம். பாஜ மேலிட தலைவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். தமாகா தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜ தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. குறிப்பாக மோடியை பிரதமர் வேட்பாளராக கொண்ட பாஜவில் அங்கம் வகிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை (இன்று) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பாஜ தலைவர் என்னை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். நான் பங்கேற்கிறேன்.

பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தமாகாவினுடைய கருத்துகளை முறையாக கேட்டு ஆலோசனை நடத்தி மக்கள் நலன், இயக்க நலன், வளமான தமிழகம், வலிமையான பாரதம் இதன் மீதும், தமிழக மக்கள் மீதும், உலகத் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ள கட்சி என இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
குறிப்பாக மாநிலத்துக்காக எந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். அதிமுக முடிவில் தலையிட விரும்பவில்லை. அவரவர் முடிவு, அவரவர் கொள்கை அடிப்படையில் அமைந்தது. ஒரே கருத்துள்ள கட்சிகள் மீண்டும் இணைந்தால் மக்கள் ஒன்றும் எதிர்க்க மாட்டார்கள். பல்வேறு மாநிலங்களுடைய ஆதரவைப் பெற்று வென்ற கட்சி பாஜ.

தமிழக வாக்காளர்கள் அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் நகரம் முதல் கிராமம் வரை மூன்றாவது முறை பாஜ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், சக்திவடிவேல், மாநில செயலாளர்கள் என்.டி.எஸ்.சார்லஸ், ஜவஹர்பாபு, ராஜம் எம்.பி.நாதன், முனவர் பாஷா, மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உடனிருந்தனர்.

Related posts

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

இளைஞருக்கு கத்திக்குத்து: சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 8 பேர் கைது..!!

என்சிஇஆர்டி அலட்சியம்; 6ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு