பாஜ, அதிமுக மறைமுக கூட்டாளிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரிமைகளை மீட்கும் முழக்கம் அமையட்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 16, 17, 18 ஆகிய நாட்களில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுகவின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என்ற ஒன்று இருக்குமா, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா, ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல் சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும்.

டெல்லியிலும், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போர் மேகங்கள் சூழந்தது போன்ற பதற்றத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது. ஒன்றிய பாஜ அரசின் உழவர்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திமுகவும் தோழமைக் கட்சிகளும் எதிர்த்தபோது, அந்தச் சட்டங்களை ஆதரித்தது அதிமுக. ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத, மாநிலக் குரோத திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் ஆதரவு தந்து, உரிமைகளை அடகு வைத்து, கஜானாவைக் கொள்ளையடித்து ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து கொண்டவர்கள் தான் அதிமுகவின் பழனிசாமியும் அவரது அமைச்சரவைக் கூட்டாளிகளும்.

பாஜ செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்தது தான் அதிமுக. மக்களின் எதிரிகளான இந்த இரண்டு கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமைஉங்களுக்கு இருக்கிறது. பத்தாண்டுகால பாஜ ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து போனதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காற்று போன பலூன்களானதையும் எடுத்துரைக்கத்தான் திமுகவின் உரிமை மீட்கும் முழக்கம் ஒலிக்கவிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகளுக்கும் பி.எல்.ஏ-2 எனப்படும் பாகமுகவர்களை நியமித்து, பூத் கமிட்டிகளை அமைத்து, ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 10 பேர் என்ற அளவில் ஏறத்தாழ 6 லட்சத்து 80 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களாம் முன்கள வீரர்களைக் கொண்டுள்ள இயக்கம் திமுக.

அவர்களுக்கு களப்பயிற்சியும் இணையத்தளப் பயிற்சியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் வியூகத்தைக் கற்றுத்தரும் வகையில் திமுக முன்னணியினரின் சிறப்புரையுடன் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், பி.எல்.ஏ-2, பி.எல்.சி. ஒருங்கிணைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும். கட்டுக்கோப்பான முறையில் கூட்டத்தை நடத்தி, மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, அவர்களின் பேராதரவுடன் வெற்றியை அறுவடை செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.

2022ம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 2023ல் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவி, இந்தியா கூட்டணிக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும். நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும். நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும்.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு