பாஜவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக உறுதி

சென்னை: பாஜவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். பாஜவில் இருந்த நடிகை கவுதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘பெற்றோரை இழந்து கைக்குழந்தையுடன் ஆதரவற்றவளாக நிற்கும்போது, எனது பலவீனம் மற்றும் தனிமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளுக்கு முன்பு அழகப்பன் என்னை அணுகினார். என்னுடைய சில நிலங்களை விற்பதற்காக கொடுத்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார். என்னை ஏமாற்றிய நபர் பாஜவில் தான் உள்ளார். ஆனால், இந்த பிரச்னையில் தமிழக பாஜ கட்சி தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பாஜ கட்சியில் இருந்து விலகுகிறேன்’’ என்றார்.

2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட கவுதமி ஆர்வமாக இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்து பாஜ கட்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் நடிகை கவுதமி நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். தமிழக பாஜவில் இருந்து விலகும் பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு நடிகை காயத்ரி ரகுராம், அதிமுகவில் இணைந்தார். கவுதமிக்கு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக கட்சி மேலிடம் உறுதி அளித்ததாலேயே, அவர் அதிமுகவில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Related posts

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு